சென்னை,
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பின்னர் ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து மு.க.முத்துவின் உடல் கோபாலபுரம் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மு.க.முத்து இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சகோதரர் மு.க.முத்து வயது மூப்பின் காரணமாக இன்று (19-ந்தேதி) காலமானதையொட்டி அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்படும்.
அன்னாரது இறுதி ஊர்வலம் மாலை 5 மணிக்கு நடைபெறும். சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மு.க.முத்து கடந்த 2006-ம் ஆண்டு பவித்ரன் இயக்கத்தில் வெளியான “மாட்டு தாவணி” என்ற படத்துக்காக தேவா இசை அமைப்பில் நாட்டுப்புற பாடல் ஒன்றை பாடி இருந்தார். அதன் பிறகு அவர் எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை.
மு.க.முத்து மரணம் பற்றி தகவல் அறிந்ததும் தி.மு.க. மூத்த தலைவர்கள் இன்று பங்கேற்க இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்தனர். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலை அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா எழுதிய “அவரும் நானும்” என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற இருந்தது. அந்த புத்தக வெளியீட்டு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மு.க.முத்து மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திராவிட கழக தலைவர் கி.வீரமணி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.