தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால் அனைத்து அருவிகளிலும் சீராக தண்ணீர் விழுந்து வந்தது. இந்த நிலையில் தென்காசி மற்றும் குற்றாலம் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக இன்று அதிகாலை குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவு தெரியாத அளவிற்கு ஆர்ப்பரித்து வெள்ளம் கொட்டியது.
ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும், பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் நின்று குளிக்கும் தடுப்புக் கம்பிகள் வரையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாளான இன்று குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.