ஒன் ப்ளஸ் ஒன் கொடுத்து மதிமுகவை திமுக கூட்டணியில் தொடர வைத்த முதல்வர் ஸ்டாலின்…

சென்னை;

திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், மதிமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம்  கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று நடைபெற்றது. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டது. 

இந்தத் தோ்தலில் அதைவிட அதிக எண்ணிக்கையில் மதிமுக தொகுதிகளை எதிர்பார்த்த நிலையில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதியை மட்டுமே வழங்க திமுக முன் வந்தது. எனவே, அதுகுறித்து ஆலோசனை நடத்த இன்று அவசர செயற்குழுக் கூட்டத்தை வைகோ கூட்டியிருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் தொடர்வது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. எதிர்வரும் தேர்தலில் திமுக வழங்கும் இடத்தில் பம்பரம் சின்னத்திலோ அல்லது தனிச் சின்னத்திலோ போட்டியிட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

மத்தியில் ஆளும் பாஜக அரசை அகற்ற இந்தியா கூட்டணி இந்த தேர்தலை கவனமாக எதிர்கொள்கிறது என்று தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில், திமுக கூட்டணி தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட  40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும்  தீர்மானம் இயற்றப்பட்டது.

மதிமுக அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டியதால் அக்கட்சியின் முடிவு என்ன என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் தொடரும் நிலைப்பாட்டை மதிமுக எடுத்திருப்பதால் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறும் என்ற யூகங்கள் அடங்கிப் போயுள்ளது.

இதனிடையே, திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதில் மதிமுக கேட்கும் ஒரு மக்களவை தொகுதியையும் மாநிலங்களவை சீட்டும் வழங்கலாம் என முதல்வர் கூறியதாகத் தெரிகிறது. இந்தத் தகவல் உடனடியாக வைகோவுக்கு தெரியப்படுத்தப்பட்டதாலேயே திமுக கூட்டணியில் தொடரும் நிலைப்பாட்டை அறிவித்தார் என்று சொல்லப்படுகிறது.

அடுத்த ஆண்டு காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர்  பதவிக்கு மீண்டும் வைகோ நிறுத்தப்படுவார் என பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *