அரியலூர்,
கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்கவேண்டும் என்று ராமதாஸ் அரியலூர் வருகை தரும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
”கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு தெற்காசியாவையே ஆட்சி செய்தவர் மாமன்னர் ராஜேந்திர சோழன் ஆவார். ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிற மாமன்னனின் விழா, இந்தாண்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் கடந்த 23-ம் தேதி தொடங்கி விட்டது. தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு விழா நடக்கிறது.
27 – ம் தேதி (நாளை மறுதினம்) நடைபெறும் நிகழ்ச்சியில் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். சோழர்களின் தலைநகரத்திற்கு வருகை தரும் பிரதமர் அவர்களை வரவேற்கிறோம். இந்திய வரலாற்றில் சோழர்களின் பங்கு அளப்பரியது.
நால்வகை படைகளைக் கொண்டு இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவிற்கு அப்பாலும் ஆட்சி செலுத்திய பெருமைக்குரியவர்கள் சோழர்கள். கலை, இலக்கியம், கோயில் கட்டுமானம் மற்றும் ஆட்சித்திறமைக்கு உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் சோழர்கள்.
பெருமைக்குரிய சோழர்களின் ஆட்சி கி.பி.1279 உடன் முடிந்து விட்டது என்று பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்குப் பின்னரும் சோழர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள், சோழர்களின் வாரிசுகளாகிய பிச்சாவரம் பாளையக்காரர்கள் தற்போதும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதுதான் வரலாறு.
சிதம்பரம் அருகே கொடியம்பாளையம் ஊராட்சியில் கொள்ளிடம் ஆறு, கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ள தீவுக்கோட்டை, தேவிக்கோட்டை; தீவுப்பட்டினம் மற்றும் ஜலகோட்டை என்ற பெயர்களில் வழங்கப் பட்டிருக்கிறது. கி.பி.16,17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக தீவுக்கோட்டை விளங்கியுள்ளது.
தஞ்சையை ரகுநாத நாயக்கர் என்ற மன்னர் (1600-1645) ஆட்சி செய்த போது, தீவுக் கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு சோழகன் என்ற மன்னன் ஆட்சி செய்துள்ளார். இவர், செஞ்சி நாயக்கரான கிருஷ்ணப்ப நாயக்கருக்கு கட்டுப்பட்ட சிற்றரசர்.
போர்த்துகீசியரின் நட்பை இவர் பெற்றிருந்தார். இவரைப்பற்றி போர்த்துகீசிய பாதிரியார் பிமெண்டா எழுதியுள்ளனர். தஞ்சை ரகுநாத நாயக்கர் கி.பி.1615-ல் தேவிக்கோட்டை சோழகனை வெற்றிகொண்டார்.
இந்த செய்தியை ரகுநாத நாயக்கரின் அவைக்களப் புலவர்களில் ஒருவரான ராமபத்திராம்பா என்பவர் “ரகுநாதப்யுதயம்” என்ற நூலிலும், யக்ஞநாராயண தீக்ஷிதர் என்பவர் “சாகித்ய ரத்னாகரம்” என்ற நூலிலும் பாடியுள்ளனர்.
தேவிக்கோட்டை சோழகன் பற்றி ஜி.எஸ் ஸ்ரீநிவாஸாச்சார்யார் எம்.ஏ. அவர்களால் எழுதப்பட்டு 1943-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட History of Gingee, chapter 1 என்ற நூலில் 103-ம் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“சோழகனின் வாரிசுகள் தற்போது குறுநில உடைமையாளர்களாகிவிட்டனர் என்றும், சோழகர்களின் தலைவரே தற்போது பிச்சாவரம் பாளையக்காரராக திகழ்கிறார் என்றும், இவர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் முடிசூடும் உரிமை பெற்றவர்களாக திகழ்கின்றனர்” என்றும் அவர் எழுதியுள்ளார்.
தேவிக்கோட்டைக்கும் பிச்சாவரத்திற்கும் நடைபயண தூரம்தான். தேவிக்கோட்டையில் வசித்த சோழர்களே பிச்சாவரத்திலும் வசித்துள்ளனர். பிச்சாவரத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்றின் மூலம் கி.பி.1583-ல் விட்டலேசுர சோழகோனார் என்பவர் பிச்சாவரத்தில் அரசாட்சி செய்துவந்தது தெரியவருகிறது. இவர் மீது சந்தமாலை பாடப்பட்டதை, திருக்கைவளம் என்ற நூலின் மூலம் அறியலாம்.
சோழகோனார் என்றால் சோழமன்னர் என்று பொருள். இவர்கள் சோழகனார், சோழனார், சோழர் என்று குறிப்பிடப்படுகின்றனர். அடுத்ததாக, தில்லைவாழ் அந்தணர்களான பிரம்ம ஸ்ரீ சோமாயாஜு அப்பாசுவாமி தீக்சிதர் அவர்கள் உபகரித்த “பார்த்தவன மஹாத்மியம்”, பிரம்ம ஸ்ரீ ராஜரத்தின தீட்சிதர் உபகரித்த “ராஜேந்திரபுர மஹாத்மியம்” ஆகிய நூல்களில் வீரவர்ம சோழன் என்ற சோழ மன்னன் பிச்சாவரத்தில் இருந்து ஆட்சி செய்துவந்தது கூறப்பட்டுள்ளது.
இந்த மன்னர், தில்லைவாழ் அந்தணர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியாரின் சமகாலத்தவர் என்று மேற்குறித்த சமஸ்கிருத மஹாத்மியங்கள் கூறுகின்றன. இந்த வீரவர்ம சோழன், உமாபதி சிவாச்சாரியாருக்கும் அவரது சீடர்களுக்கும், சிதம்பரம் அருகேயுள்ள கொற்றவன்குடியில் மடாலயம் அமைத்துக்கொடுத்தார். இந்த மடாலயம் இன்றும் உள்ளது.
இப்படி தீவுக்கோட்டையிலும் பிச்சாவரத்திலும் சோழர்கள் இருந்து ஆட்சி செய்துவந்தது வரலாற்றில் அறியப்படுகிறது. பிச்சாவரம் பாளையக்காரராக 1872-ல் ராமபத்திர சூரப்ப சோழனார் என்பவர் இருந்ததை ஜாதிசங்கிரக சாரம் என்ற நூல் கூறுகிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் சோழமன்னர்களுக்கு தில்லைவாழ் தீட்சிதர்கள் முடிசூட்டிவைப்பது வரலாறு.
பெரியபுராணத்தில் வரும் கூற்றுவநாயனார் புராணம், உமாபதி சிவாச்சாரியார் எழுதிய கோயில் புராணம் போன்றவை இதற்கு ஆதாரங்களாக உள்ளன.
1908-ம் ஆண்டு சாமிதுரை சூரப்ப சோழனாருக்கும், 1911-இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனாருக்கும், 1943-இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனாருக்கும், 1978-இல் சிதம்பரநாத சூரப்ப சோழனாருக்கும் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சோழ அரசராக முடிசூட்டியுள்ளனர்.
இவ்வளவு ஆதாரங்கள் இருந்தாலும், மூன்றாம் ராஜேந்திர சோழனோடு (1246-1279) சோழர் ஆட்சி முடிந்துவிட்டதாக ஒரு தவறான கருத்து நிலவுகிறது. அந்த காலகட்டத்திற்கு பிறகும் சோழர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்பதை மதுராவிஜயம் என்ற நூலும், மேலே சொன்ன ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன.
தற்போது, பிச்சாவரம் பாளையக்காரர்களாக அறியப்படும் (வன்னியர் குல சத்திரியர்) குடும்பத்தினர்தான் சோழர்களின் வழித்தோன்றல்கள். எனவே சோழர்களின் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை தரும் பிரதமர் அவர்கள், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பிச்சாவரம் சோழர் குடும்பத்தினரை கவுரவிக்க வேண்டும்.
1978 ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் தில்லைவாழ் அந்தணர்களால், சோழ அரசராக முடி சூட்டப் பெற்ற சிதம்பரநாத சூரப்ப சோழனாரின் மனைவியான திருமதி சாந்தி தேவி ஆயாள், அவரது மகன் மஹாராஜராஜ ஸ்ரீ மன்னர்மன்னன் சூரப்ப சோழனார், மகள் ஐஸ்வர்யா சூரப்ப சோழனார் ஆகியோரை பிரதமர் சிறப்பிக்க வேண்டும்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில், பிச்சாவரம் சோழர் குடும்பத்தினரை பரம்பரை அறங்காவலராக நியமிக்க வழிவகை செய்யவேண்டும். கங்கைகொண்ட சோழபுரம் கோயில் 300 ஆண்டுகளுக்கு மேலாக உடையார்பாளையம் காலாட்கள் தோழ உடையார் அரச வம்சத்தினரால் பாதுகாக்கப்பட்டது. அவர்களையும் பிரதமர் கௌரவிப்பதோடு பாழடைந்து வரும் உடையார்பாளையம் அரண்மனையை பாதுகாக்கவும் சீரமைக்கவும் ஆவண செய்ய வேண்டும். கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்கவேண்டும்.
அதேபோல் அரியலூர் மாவட்டத்தின் சோழகங்கம் ஏரியை தூர்வாரி முடிக்கும் திட்டத்தை தமிழக அரசு கையில் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. திட்டத்திற்காக ஒதுக்கியிருக்கும் ரூ.12 கோடியில் திட்டம் முழுமை பெறுமா என்ற ஐயப்பாடு இருக்கிறது.
கால்வாய்பணி, வரத்து மற்றும் உபரிநீர்க் கால்வாய்களை தூர்வாரல் பணி, ஏரியின் மதகுகளை சீரமைக்கும் பணி என, இரண்டாண்டுகளுக்கு முன்னரே திட்ட மதிப்பீடாக ரூ.662.73 கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்துள்ளதையும் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.
12 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் ஐம்பதில் ஒரு பங்கு கூட சோழகங்கம் ஏரி, கால்வாய்- வரத்துப் பணிகளை செய்து முடிக்க முடியாது என்பதையும் தமிழ்நாடு அரசு நினைவில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.