மான்செஸ்டர்:
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் போராட்ட குணமும், அவரது விடாமுயற்சியும் அனைவரும் அறிந்ததுதான். அதற்கு மற்றுமொரு உதாரணமாக அமைந்துள்ளது மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் அவரது ஆட்டம். வலது குதிகால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும், அணிக்காக பேட் செய்து அசத்தினார் ரிஷப் பந்த்.
திரைப்படங்களில் வரும் வசனங்களை ரியல் லைஃபில் பிரதிபலிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக தனது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்து ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் அரை சதம் கடந்தார்.

இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதும் டைவ் அடித்து, அதை கொண்டாடினார் பந்த். தன்னால், அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கைதான் அந்த அசாத்திய டைவுக்கு காரணம். அதுபோன்ற கொண்டாட்டத்தை கிரிக்கெட் களத்தில் பார்ப்பது அரிது. அதுதான் ரிஷப் பந்த்.
இப்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் அதே நம்பிக்கையுடன் விளையாடி அசத்தினார். விடாமுயற்சியும், போராட்ட குணமும் ரிஷப் பந்த் ரத்தத்தில் இரண்டற கலந்துள்ளது என்று ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.
மான்செஸ்டர் போட்டியின் முதல் நாளில் 37 ரன்கள் எடுத்த நிலையில், கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று பந்தை மிஸ் செய்தார் ரிஷப் பந்த்.
அவரது வலது காலில் பந்து பட்ட காரணத்தால் களத்தில் வலியால் துடித்துப் போனார். ஷூவை அகற்றியபோது கால் வீக்கமாக இருந்தது. லேசாக ரத்தமும் கசிந்தது. அவரால் சப்போர்ட் இல்லாமல் நடக்கவே முடியாத நிலை. அதனால், வாகனம் மூலம் பெவிலியன் திரும்பினார்.
அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பந்து, அவரது வலது குதிகாலை பலமாக தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இந்தச் சூழலில் மான்செஸ்டர் டெஸ்ட்டில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்ள மாட்டார் என்றும், தேவை ஏற்பட்டால் பேட் செய்வார் என்றும் இந்திய அணி நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், மான்செஸ்டர் டெஸ்ட்டின் 2-வது நாளன்று அவர், நொண்டியபடி களத்துக்கு வந்து பேட் செய்தார். அவர் களத்துக்குள் என்ட்ரி கொடுத்தபோது மைதானத்தில் போட்டியை காண வந்திருந்த பார்வையாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
ரிஷப் பந்த் பேட் செய்ய வர வேண்டும் என இரு நாட்டு ரசிகர்களும் விரும்பினர். ஏனெனில், அவரது ஆட்ட பாணி அப்படி இருக்கும்.
இந்த போட்டியின் முதல் நாளன்று இங்கிலாந்தின் அதிவேக பந்துவீச்சாளரான ஆர்ச்சர் வீசிய பந்தை முழங்காலிட்டு ஸ்வீப் ஷாட் ஆடி அசத்தினார் பந்த். அதைப் பார்த்து மென் புன்னகையோடு கடந்தார் ஆர்ச்சர். சுழற்பந்து வீச்சை ஆடுவது போல அந்த ஷாட்டை ஈஸியாக ஆடியிருந்தார். அதுதான் ரிஷப் பந்த்.
ரிஷப் பந்த் கம்பேக்: முதல் இன்னிங்ஸில் ஷர்துல் தாக்குர் 41 ரன்களில் ஆட்டமிழந்ததும் இன்னிங்ஸை நிறுத்திய இடத்திலிருந்து தொடங்கினார் ரிஷப் பந்த். காயத்தால் அவர் வெளியேறியபோது 48 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தார். பின்னர், 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இயல்பாக நடக்க முடியாமல் ஒரு காலினை தங்கியபடி ஆடி தனது துணிச்சலையும், மன உறுதியையும் ரிஷப் பந்த் வெளிப்படுத்தி இருந்தார்.
அவரது இன்னிங்ஸில் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சொன்னது போல தேவைப்பட்டால் பந்த் இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்ய வாய்ப்புள்ளது. இதில் சில சாதனைகளையும் நிகழ்த்தி இருந்தார். அவரது இந்த இன்னிங்ஸ் கிரிக்கெட் வரலாற்றில் என்றென்றும் நினைவில் இருக்கும்.
கார் விபத்தில் இருந்து மீண்டவர்: கடந்த 2022-ல் டிசம்பர் மாத இறுதியில் டெல்லி – டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் பயணித்தபோது சாலையில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார்.
இந்த விபத்து ரூர்கி அருகே நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அந்த வழியாக பயணித்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டார்.
விபத்தில் அவருக்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. வலது முழங்காலில் தசை நார் கிழிந்தது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. மும்பையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதிலிருந்து மெல்ல மீண்டு வந்த அவர், சமயங்களில் அது சார்ந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களின் ஊக்கத்தை பெற்றார். இந்நிலையில், சுமார் 12 மாதங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு அவர் முழு உடற்தகுதியை அடைந்துவிட்டதாக பிசிசிஐ அறிவித்தது.
அதையடுத்து, 2024 ஐபிஎல் சீசனில் விளையாடினார். அதே ஆண்டில் மே மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார்.
அந்த தொடரை இந்தியா வென்றது. ‘இங்கிருந்து சிறந்த முறையில் எனது பயணம் இருக்கும்’ என ரிஷப் பந்த் அப்போது சொல்லி இருந்தார். இந்நிலையில்தான் இப்போது ரிஷப் பந்த் காயமடைந்துள்ளார். நிச்சயம் இந்த கட்டத்தை அவர் கடந்த வந்து மீண்டும் கலக்குவார்.