சேலம்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள், நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, துங்கபத்ரா அணை உள்ளிட்டவை நிரம்பி வருகிறது.
இதன் காரணமாக இந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது.
இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து கடந்த 2 நாட்களாக உபரிநீர் திறப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக கடந்த 25-ந் தேதி நிரம்பியது.
இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முதலில் 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
பின்னர் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது. அதிகபட்சமாக நேற்று மதியம் 12 மணியளவில் வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மாலையில் அது 1 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
அதே போல் நேற்று இரவு கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 29 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
அந்த தண்ணீரும் இன்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 500 கனஅடியாக இருந்தது. இதையடுத்து நீர்மின் நிலையம் வழியாக வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியும், 16 கண்மதகு வழியாக வினாடிக்கு 82 ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 1 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இது போக கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து இன்று 2-வது நாளாகவும் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளதால் காவிரி ஆறு வெள்ளக் காடானது. ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
மேட்டூர் அணை 16 கண் மதகு எதிரே உள்ள தங்கமாபுரிபட்டணம், அண்ணாநகர், பெரியார் நகர், சேலம் கேம்ப் பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ, போட்டோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மேட்டூர் அணை பகுதியில் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாயத்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுவதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டப்படி ஆர்ப்பரித்து செல்கிறது.
இதையடுத்து குமாரபாளையம்-ஈரோடு மாவட்டம் பவானி இடையே உள்ள பழைய காவிரி பாலம் அடைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளுக்கு பொதுமக்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதே போல் பள்ளிபாளையம் காவிரி ஆற்றிலும் தண்ணீர் அதிகரித்து வருகிறது. இதை பள்ளிபாளையம் மேம்பாலத்தில் இருந்தபடி பொதுமக்கள் கண்டு ரசித்தனர். பள்ளிபாளையம் சந்தைப்பேட்டை பகுதியில் ஆற்றின் மையப்பகுதியில் உள்ள முனியப்பன் சாமி சிலையை தண்ணீர் சூழ்ந்து கொண்டு சென்றது.
இந்த பகுதியிலும் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும் செல்பி எடுக்கவும் தடை விதித்து பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து உள்ளதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து 11 மாவட்ட கலெக்டர்களுக்கும் மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் தகவல் கொடுத்து உள்ளார். இதையடுத்து காவிரி கரையோர பகுதிகளை அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.