48-வது ஸ்தலமாக திகழும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்: கோவிந்தா… கோபாலா… கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்!!

108 வைணவ திருத்தலங்களில் 48-வது ஸ்தலமாக திகழும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரத்தை கொண்டாடும் வகையில் 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


விழாவையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. 5-ம் திருநாளான 24-ந்தேதி 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆண்டாள் பெரிய அன்னவாகனம், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனங்களிலும், பெரியாழ்வார் சிறிய அன்னவாகனத்திலும் எழுந்தருளி காட்சி அளித்தனர். 7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு சயனசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆடிப்பூர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 9-ம் திருநாளான இன்று (28-ந்தேதி, திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் மேளதாளங்கள் முழங்க கடக லக்னத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னார் திருத்தேரில் எழுந்தருளினர்.

காலை 9.30 மணிக்கு தேரோட்டத்தை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கலெக்டர் சுகபுத்ரா வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா…, கோபாலா… என்ற பக்தி கோஷம் விண்ணை முட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது கருடன் வானில் வட்டமடித்தது பக்தர்களை பரவசம் அடையச் செய்தது.

தேரோட்டத்தை முன்னிட்டு தேர் செல்லும் 4 ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தேர் சக்கரங்கள் பதியாத வகையில் இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டு இருந்தன.

அத்துடன் புதியதாக 7 வடங்கள் தேருடன் இணைக்கப்பட்டு இருந்தது. மேலும் வேளாண்மைத்துறை சார்பில் பொக்லைன் எந்திரங்கள் தேரை பின்னால் இருந்து தள்ளியதால் தேரானது பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்தது.


அதேபோல் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டிருந்தது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *