ட்ரை கிளி சரைடுகள் என்பது ரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு ஆகும். நாம் சாப்பிடும் உணவில், உடலுக்கு தேவையான அளவு கலோரியை விட அதிகளவு கார்போஹைட்ரேட் வகை உணவுகளை நாம் உட்கொண்டால், அவை ட்ரை கிளிசரைடுகளாக உடலில் சேமிக்கப்படுகிறது. இது ஹைபர் ட்ரை கிளிசெரிடெமியா எனப்படும்.
ட்ரை கிளிசரைடுகளின் வேலை பயன்படுத்தப்படாமல் சேமிக்கப்பட்ட கலோரிகள் மூலம் உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. ஆனால் இவை ரத்தத்தின் சராசரி அளவான 150-ஐ விட அதிகமாகும் போது இதய தமனிகள் மற்றும் ரத்த நாளங்களில் படிகிறது. இது அர்த்ரோஸ் கிளிரோசிஸ் என்ற நிலையை ஏற்படுத்துகிறது. இவை பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
வளர்சிதை மாற்ற நோய்க்குறிகளான இடுப்பைச் சுற்றி அதிக கொழுப்பு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த சர்க்கரை அளவு, டைப் 2 வகை நீரிழிவு நோய் இவைகளை ஏற்படுத்துகிறது.
ட்ரை கிளிசரைடுகளை கட்டுக்குள் வைப்பது எப்படி?
1) தினசரி நடைப்பயிற்சி, சைக்கிள், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். குறைந்தது 30 நிமிட உடல் செயல்பாடுகள் ட்ரை கிளிசரைடுகளைக் குறைத்து, ‘நல்ல’ கொழுப்பை அதிகரிக்கும்.
2) கார்போஹைட்ரேட் வகை உணவுகளான சர்க்கரை, மாவுப் பண்டங்கள், குளிர்பானங்கள். சோடா, பிரக்டோஸ், பீட்சா, பர்கர், பேக்கரி உணவுகள் கூடுதல் கலோரிகளைத் தருவதால் இவை ட்ரை கிளிசரைடுகளாக மாற்றப்பட்டு கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. அதிக கலோரிகளை தரும் உணவுகளை குறைப்பது ட்ரை கிளிசரைடுகளின் அளவை குறைக்கும்.
சிவப்பு இறைச்சியை அளவுடன் எடுக்க வேண்டும். டிரான்ஸ் கொழுப்புகள், ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட எண்ணெய்கள் அல்லது கொழுப்புகள் சேர்ந்த உணவுகளை தவிர்க்கவும். மது அருந்துவது ட்ரை கிளிசரைடுகளின் அளவை உயர்த்துகிறது. ஆல்கஹாலில் அதிகமான கலோரிகள் மற்றும் சர்க்கரை உள்ளது. எனவே மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
3) ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சாளை மீன் (சார்டின்). டூனா மீன், பாதாம், வால்நட்,ப்ளாக் சீட்ஸ் (அலிசி விதை). ஆளி விதை, பூசணி விதை, முழுத்தானியங்கள், பருப்பு வகைகள், வெள்ளரி விதை இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள், கீரைகள் இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, புதினா, லவங்கப்பட்டை, சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம் இவைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
4) எந்த எண்ணெய் பயன்படுத்தினாலும் அளவுடன் எடுக்க வேண்டும். செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய். ஆலிவ் எண்ணெய் சிறந்தது.
சித்த மருத்துவம்:
1) ஏலாதிச்சூரணம்-1 கிராம், குங்கிலிய பற்பம் -200 மி.கி. வீதம் மூன்று வேளை வெந்நீரில் சாப்பிட வேண்டும்.
2) வெண்தாமரை இதழ் பொடியை காலை, இரவு ஒரு கிராம் வீதம் வெந்நீரில் சாப்பிட வேண்டும்.