ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும் உணவுப்பொருட்கள்

உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், ரீபைன்டு ஆயில் ஆகியவற்றை குறைந்த அளவில் பயன்படுத்துவது நல்லது. பாமாயில் வேண்டாம். ஆவியில் வேக வைத்த உணவுகள் ஏற்றவை. எப்போதாவது கோழிக்கறி அல்லது மீன் குழம்பு சாப்பிடலாம்.

காபி, டீக்குப் பதிலாகப் பழச்சாறு, லெமன் டீ, கிரீன் டீயை குடிக்கலாம். இவற்றில் நிறைந்துள்ள ஆண்டிஆக்ஸிடன்ட் சத்துகள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு நார்ச்சத்து உணவுகள் மிகவும் ஏற்றவை. இவை ரத்த அழுத்தத்தையும், கொழுப்பையும் குறைக்கும், நீரிழிவைக் கட்டுப்படுத்தும், உடல் எடையையும் குறைக்கும்.

கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், தக்காளி, கொய்யா, தர்பூசணி, மாதுளை, பீன்ஸ், பட்டாணி, பயறு வகை, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம். பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகிய தாதுகள் ரத்த அழுத்தத்தை உடலில் சீராக வைத்திருக்க உதவும் என்பதால் பால், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், சோயாபீன்ஸ், உளுந்து, கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிபிளவர், பருப்புக்கீரை, முருங்கைக் கீரை, இளநீர் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு பூண்டு மிகவும் ஏற்றது. பூண்டில் உள்ள சத்துகள் ரத்தக்குழாயை விரிவடையச் செய்கின்றன. தமனிகளில் படியும் கால்சியம் தாதுக்களையும் தடுக்கின்றன.

தலை சுற்றும்போது மட்டும், உயர் ரத்த அழுத்தம் இருக்குமோ என்று பலரும் சந்தேகப்படுவார்கள். அது மட்டுமல்ல தலைவலி, மயக்கம், வாந்தி, மூக்கில் ரத்தக்கசிவு, நடக்கும்போது மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி, காலில் வீக்கம், களைப்பு, படபடப்பு ஆகியவையும் உயர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறிகள்தான்.

குடும்பப் பின்னணியில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும், 30 வயதைக் கடந்தவர்களும் தொடர்ந்து உயர் ரத்த அழுத்த அளவை கண்காணித்துவர வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருப்பதை ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டால் மாத்திரை இல்லாமல் உணவுப்பழக்கம் மூலம் சமாளிக்க முடியும்.

அதேநேரம், இதயம், மூளை, சிறுநீரகம், கண் என பிற உறுப்புகளை பாதிக்கும் தன்மையானது, உயர் ரத்த அழுத்த நோய்க்கு இருப்பதால், முறையான சிகிச்சை அவசியம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *