காசாவில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 10 மணி நேரம் தாக்குதல் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு….

காசா,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. காசாவில் மக்கள் உணவு, மருத்துவம் இன்றி தவித்து வரும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால், உணவு கிடைக்காமலும், ஊட்டச் சத்து குறைபாட்டாலும் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை காசாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் காசாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் உணவுக்காக காத்திருக்கும் மக்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலின் தாக்குதலால் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் பட்டினியால் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 100-ஐக் கடந்துள்ளது. இதனால், போரை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரக்கோரி சா்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிா்ப்பு வலுத்து வருகிறது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்பட 24 நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்தநிலையில்,போதிய உணவு கிடைக்காமல் காசாவில் பட்டினி பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்துள்ளதால், இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து காசா சிட்டி, டெய்ர் அல்- பலாஹ் மற்றும் முவாசி ஆகிய மக்கள் அடர்த்தி நிறைந்த மூன்று பகுதிகளில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 10 மணி நேரம் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை தினமும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த வழித்தடங்கள் வழியாக எடுத்துச் செல்லலாம் மற்ற பகுதிகளில், வழக்கம் போல் தாக்குதல்கள் தொடரும்.

மறு அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும். காசாவில் மாவு, சர்க்கரை, மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் அடங்கிய பைகளை வான்வழியாக வீசியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

மேலும் ஜோர்டனும் ஐக்கிய அரபு அமீரகமும், வான்வழியில் உதவிப் பொருட்களை போடுவதற்கு ஏதுவாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *