சென்னை:
பகல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் அங்கு இருந்த 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர். ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் தொடர்ச்சியாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே லிட்வாஸ் என்ற அடர்ந்த வனப் பகுதியில் சந்தேகம் படும் படி சிலர் சுற்றி வருவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற பாதுகாப்புப் படையினர் அவர்களை பிடிக்க முயன்றனர்.
அப்போது அவர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். தொடர்ந்து இரு சிஆர்பிஎஃப், ஜம்மு காஷ்மீர் போலீசார், இந்திய ராணுவத்தினர் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரும் பகல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.