தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் தனிச்சிறப்பு உண்டு. அதில் ஆடி மாதத்திற்கு பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. குலதெய்வ வழிபாடும், அம்மன் வழிபாடும் ஆடி மாதத்தில் தான் செய்யப்படுகிறது.
பொதுவாக உலகின் நாகரிகங்கள் நதிக்கரையில் தோன்றியதாக கூறுவார்கள். நதிகள் தான் மனித வாழ்க்கையின் ஆதாரம்.

விவசாயம் தோன்றியது நதிக்கரையில் தான். அதனால் தான் நதிகளை தமிழர்கள் அன்னையாய், தெய்வமாய் போற்றுகிறார்கள். அப்படி சிறப்பு வாய்ந்த நதியின் கரையில் கொண்டாடப்படுவது தான் ஆடிப்பெருக்கு விழா.
அதன்படி இன்று காவிரி கரையோரப்பகுதிகளில் ஆடி மாதம் 18-ந் தேதி எனப்படும் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் உள்ள காவிரி கரைகளில் வெகு விமர்சையாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரி நதியை பெண்ணாக, தாயாக பாவித்து வணங்கி போற்றும் ஆடிப்பெருக்கு என்னும் மங்கள விழா கொண்டாடப்பட்டது.
தஞ்சையை அடுத்த திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள புஷ்ய மண்டப படித்துறைக்கு இன்று காலை முதலே பெண்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் வந்தனர். காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
பின்னர் பெண்கள் படித்துறையில் வாழை இலையை விரித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்தனர். மேலும் தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பனை ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகமணி மாலை, வளையல், அரிசி, வெல்லம், பேரிக்காய், கொய்யா, மாதுளை, விளாம்பழம் ஆகியவற்றை வைத்து விளக்கேற்றினர்.
தொடர்ந்து மா விளக்கு, அரிசி, வெல்லம் கலந்த காப்பு அரிசி ஆகியவற்றை வைத்து சாம்பிராணி, ஊதுபத்தி உள்ளிட்ட வாசனைபொருட்களை ஏற்றி வழிபாடு செய்ததுடன் மஞ்சள் பிள்ளையாருக்கும், காவிரி தாய்க்கும் தாம்பூலத்தட்டில் கற்பூரத்தை ஏற்றி வழிபட்டனர்.
மஞ்சள் கயிறு வழிபாடு முடிந்தவுடன் புத்தாடை அணிந்து வந்திருந்த புதுமண தம்பதியினர் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். தொடர்ந்து திருமணத்தின்போது தாங்கள் அணிந்து இருந்த மாலைகளை பைகளில் பத்திரமாக கொண்டு வந்து அவற்றை காவிரி ஆற்றில் புதுமண தம்பதியினர் விட்டனர். சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக்கொண்டனர்.
அதேபோல திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டியும், நல்ல மணமகன் கிடைக்க வேண்டியும் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். திருமணமாகாத ஆண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி மஞ்சள் கயிற்றை கைகளில் கட்டிக்கொண்டனர்.
புதுப்பெண்களுக்கு தாலியை பிரித்து கட்டும் நிகழ்வும் காவிரி படித்துறையில் நடந்தது. திருமணத்தின்போது கட்டப்பட்டிருந்த தாலிகயிறுக்கு பதிலாக புது தாலி கயிற்றை அணிந்து கொண்டனர். பின்னர் வாழை மட்டையில் தீபத்தை வைத்து காவிரி ஆற்றில் மிதக்கவிட்டனர்.
தொடர்ந்து படித்துறை அருகில் உள்ள வேப்பமரம், அரசமரங்களை மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டி பெண்கள் சுற்றி வந்து நாகர் சிலைகளுக்கு மஞ்சள், குங்குமத்தை வைத்து மஞ்சள் கயிற்றை கட்டி விட்டு, நாகர், சந்தான கணபதி, சோமசுந்தரேஸ்வரர் சன்னதி முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர்.
பின்னர் சாமிக்கு படைக்கப்பட்ட வெல்லம் கலந்த பச்சரிசி மற்றும் பழ வகைகளை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். சிறுவர்கள் சிறிய சப்பரங்களை இழுத்து வந்து மகிழ்ந்தனர்.
ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கோலாகலமாக கொண்டாடினர்.
தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள படித்துறை, வெண்ணாறு படித்துறை, எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள கல்லணைக்கால்வாய் படித்துறை, வடவாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இன்று ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேலும் புதுஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவிப்பு பதாகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
கும்பகோணம், திருவிடைமருதூர், சுவாமிமலை, பாபநாசம், திருப்பனந்தாள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆடிப்பெருக்கு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு சிறுவர்கள் காவிரி ஆற்றங்கரைகளில் சப்பரத்தில் சுவாமி படங்களை வைத்து அலங்கரித்து இழுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் மீண்டும் சப்பரத்தை வீட்டுக்கு இழுத்து வந்தனர்.
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி படித்துறைகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்பு வீரர்களும் குவிக்கப்பட்டு இருந்தனர்.