சென்னை
கமலாலயத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:- டெல்லியில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நமது நாட்டின் சாதனைகளையும், தீவிரவாதத்துக்கு எதிராக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய தலைவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார். இந்தியாவை உலகின் மிகப்பெரிய 4-வது பொருளாதார நாடாக அவர் மாற்றி காட்டி இருக்கிறார்.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்க மாட்டோம் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரையில் கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. எனவே நாம் அனைவரும் தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கும் நாம் உறுதி ஏற்க வேண்டும்.
தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கும்பலைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசை அச்சுறுத்தி வருகிறார்கள். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்.
2026-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்கும். அப்போது நாம் சென்னை கோட்டையில் கொடி ஏற்றுவோம். இது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.