மாஸ்கோ,
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற பின்னர், 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் டொனால்டு டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். இதற்காக புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பலமுறை பேசினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் எல்மென்டார்ப்-ரிச்சர்ட்சன் கூட்டு ராணுவ படை தளத்தில் நேற்று(15-ந்தேதி) அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்து பேசினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.
இதன் பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய புதின், “எங்களுக்கு இடையே நடந்த போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
எங்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன். அடுத்த முறை மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடைபெறும்” என்றார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், “மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் சுவாரஸ்யமானது. அது நிச்சயம் நடைபெறும் என நான் நம்புகிறேன்.
போரை நிறுத்தும் முடிவு ஜெலன்ஸ்கி கையில்தான் உள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அழைத்து இந்த சந்திப்பு பற்றி அவரிடம் பேசுவேன்” என்று தெரிவித்தார்.