பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா வலுவாக நிற்கிறது; மேலும் பிரதமர் மோடிக்கு எங்களது முழு ஆதரவு உண்டு…….

புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்’ பொறுப்பு ஏற்றது.

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டு உள்ளது. கடந்த 23-ந்தேதி முதல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை உள்ளிட்ட அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தது. இதற்கு பாகிஸ்தானும் எதிர்வினை ஆற்றுவதால் இரு நாடுகள் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.

இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக்கொண்டது. இதேபோல மோதல் போக்கை கைவிட்டு இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இங்கிலாந்து, சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஈரான் ஆகிய நாடுகளும், ஐ.நா.வும் வேண்டுகோள் விடுத்தன.

இதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ தனித்தனியாக தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

அப்போது தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் ஒத்துழைப்பதாக அமெரிக்காவின் நிலைபாட்டை ஜெய்சங்கரிடம் அவர் உறுதிப்படுத்தினார். தெற்காசிய பிராந்தியத்தில் பதற்றத்தை தணிக்கவும், அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்கவும் பாகிஸ்தானை இணைந்து பணியாற்றுமாறும் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி கேட்டுக்கொண்டார்.

பாகிஸ்தான் பிரதமருடன் பேசும்போது, ‘பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், அமைதி, பாதுகாப்பை பராமரிக்க இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை மந்திரியும், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் ஆதரவை தெரிவித்தார்.


இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மீண்டும் ஆதரவு தெரிவித்து உறுதி அளித்துள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா இந்தியாவுடன் வலுவாக நிற்கிறது என்றும் பிரதமர் மோடிக்கு எங்களது முழு ஆதரவும் உண்டு என்றும் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் டாமி புரூஸ் கூறியதாவது:-


காஷ்மீர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ இரு நாடுகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

கடந்த வாரம் பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் கூறியதுபோல் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா வலுவாக நிற்கிறது. மேலும் பிரதமர் மோடிக்கு எங்களது முழு ஆதரவு உண்டு.


இரு நாட்டு அரசுகளிடமும் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இரு தரப்பினரிடம் இருந்தும் ஒரு பொறுப்பான தீர்வை நாங்கள் கேட்கிறோம்.
இவ்வாறு டாமி புரூஸ் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *