திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 14-ந் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலை நேரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர்.
4-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்து கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி உள்மாட வீதி நான்கிலும், ரதவீதி நான்கிலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஆவணித் திருவிழாவின் 5-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதிஉலா நடக்கிறது.