மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு!!

சென்னை
நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு அவர் கடிதம் அனுப்பினார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் இருந்த நிலையில் திடீரென ஜெகதீப் தன்கர் பதவி விலகியது மத்திய அரசு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, துணை ஜனாதிபதி பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, துணை ஜனாதிபதி பதவி காலியாக இருந்தால் அதற்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி தேர்தல் கமிஷன் பணிகளை முடுக்கி விட்டது. குறிப்பாக துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தகுதி வாய்ந்த ‘எலக்ட்டேரல் காலேஜ்’ எனப்படும் வாக்காளர்களின் தொகுப்பை தேர்தல் கமிஷன் உருவாக்கியது.

அதன்படி நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களும், மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்களும் துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த 7-ந் தேதி வெளியிடப்பட்டு, அன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி வருகிற 21-ந் தேதி ஆகும். துணை ஜனாதிபதி தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்டோர் களத்தில் இருந்தால், அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆளும் கூட்டணியின் வேட்பாளரை தேர்வு செய்ய பா.ஜ.க.வின் ஆட்சிமன்றக்குழு நேற்று டெல்லியில் கூடியது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவரும், மராட்டிய கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் (67 வயது) தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜே.பி.நட்டா, துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணனை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளிடம் கடந்த வாரமே பேசியதாகவும், தொடர்ந்து அவர்களது ஆதரவை கோர உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ராஜ்நாத் சிங், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *