மதுரை;
மதுரையில் த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு நேற்று நடந்தது. திரளான தொண்டர்கள் பங்கேற்ற மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பேசும்போது, ‘2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. – த.வெ.க. இடையேதான் போட்டி’ என்று தெரிவித்தார்.
நாமும் பா.ஜ.க.வுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதற்கு கூட்டணி வைக்க வேண்டும்?. அவர்களுடன் கூட்டணி வைக்க நம்ம என்ன மிகப்பெரிய ஊழல் கட்சியா?.
த.வெ.க. என்பது மகத்தான வெகுஜன மக்கள் படை. நமது தலைமையில் அமைக்கப்போகிற மக்கள் ஆட்சிக்காக, இந்த அடிமை கூட்டணியில் நாம் ஏன் சேர வேண்டும்?.
ஒரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். இடம் அடிபணிந்து கொண்டும், இன்னொரு பக்கம் மதச்சார்பற்ற கூட்டணி என்று மக்களை ஏமாற்றும் கூட்டணியாக நம் கூட்டணி இருக்காது.
என்னை நம்பி வருகிற அனைவருக்கும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் உரிய பங்களிப்பு வழங்கப்படும். 2026 தேர்தலில் இரண்டு கட்சிகளுக்குத்தான் போட்டி. ஒன்று த.வெ.க. மற்றொன்று தி.மு.க. என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் விஜய் மாநாட்டில் பேசியது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்,
தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல் விஜய் தன்னை நினைத்துக்கொள்கிறார். யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம், மாநாடு நடத்தலாம். ஆனால் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது.
அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் தவிர்த்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது என்பதால் அவர்களை குறிப்பிடுகிறார். ஆனால் விஜயின் அரசியல் ஆசான் யார் என்பது தெரியவில்லை.
அ.தி.மு.க. குறித்த விஜயின் விமர்சன பேச்சுக்களை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். த.வெ.க. தலைவர் விஜய் ஒன்றரை ஆண்டாக கை குழந்தையாக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.