ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் பொது தேர்வு ஆணையம், அரசு வேலைக்கான தேர்வுகளில் மோசடியில் ஈடுபடுபவர்கள் பற்றி தணிக்கை செய்தது.
அப்போது போலி ஊனமுற்ற சான்றிதழ்கள், பட்டம் பெற்றதாக போலி சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் பிற சந்தேகத்திற்கு இடமான வழிகளில் மோசடியில் ஈடுபட்ட தகுதியற்ற 524 போட்டியாளர்களை கண்டுபிடித்தது.
அவர்களுக்கு தேர்வுகளில் பங்குபெற தடை விதிக்கப்பட்டது. அவர்களில் 415 பேருக்கு வாழ்நாள் முழுவதும் அரசு தேர்வுகளை எதிர்கொள்ள தடை விதிக்கப்பட்டது. மீதமுள்ள 109 பேர் ஒன்று முதல் 5 ஆண்டுகள் வரை தடை செய்யப்பட்டனர்.
அதிகப்பட்சமாக ஜலூர் மாவட்டத்தில் 128 பேர் தடை செய்யப்பட்டனர். பெரும்பாலானவர்கள் போலி பட்டப்படிப்பு சான்றிதழ்கள், ஆவணங்களை வழங்கியதாக 157 பேர் தடை பெற்று உள்ளனர். 148 பேர் தேர்வில் நியாயமற்ற வழிகளில் மோசடியில் ஈடுபட்டதாக தடை விதிக்கப்பட்டு உள்ளனர்.
தடை பெற்றவர்களில் 514 பேர் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
ஒதுக்கீடு சலுகையை பெறுவதற்காக போலி விவாகரத்து சான்றிதழ் பெற்று உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. அதுகுறித்தும் விசாரணை நடத்தப்படடு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.