தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்ற முதல்வர் ஸ்டாலின் !!

சென்னை:
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார்.

துர்கா ஸ்டாலின், முதல்வரின் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் முதல்வர் உடன் செல்கின்றனர். இன்று இரவு 9 மணிக்கு ஜெர்மனி சென்றடையும் அவருக்கு அயலக தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

அங்கு முதலீட்டாளர்களை முதல்வர் நாளை (ஆக.31) சந்திக்கிறார். ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு, செப்.1-ம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்படுகிறார்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையம் செல்வதற்கு முன்பாக பத்திரிகையாளார்களை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின். அப்போது அவர் பேசியதாவது: “ஒருவாரகால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்கிறேன்.

இந்த பயணத்தில் தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

2021-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு இதுவரை 10 லட்சத்துக்கு 62 ஆயிரத்து 752 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

இதன் மூலம் தோராயமாக 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பல நிறுவனங்கள் தயாரிப்பை தொடங்கிவிட்டன. இதன் மூலம் வளர்ச்சி வந்திருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு, ஒன்றிய அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களே சாட்சி.

என்னுடைய ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும் தரவுகளை எடுத்துச் சொல்லி தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்திருக்கிறேன்.

ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ஸ்பெயின், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய ஐந்து நாடுகளுக்கு நான் சென்று வந்ததன் மூலம் ரூ.18,498 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளன.

நாட்டிலேயே அதிவேகமான வளர்ச்சிப் பணிகள் நடைபெறக்கூடிய தமிழ்நாட்டை நோக்கி புதிய முதலீடுகளை ஈர்க்க நான் ஜெர்மனி, இங்கிலாந்துக்கு செல்கிறேன். அதற்கு உங்கள் வாழ்த்துகள் எனக்கு வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் அன்புடன் நான் புறப்பட்டுச் செல்கிறேன்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த வெளிநாட்டுப் பயணம் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார்.

அவரைப் பொறுத்தவரை அவருடைய பயணங்களைப் போலவே இதுவும் இருக்கும் என்று நினைக்கிறார். ஆனால் நான் கையெழுத்திட்ட அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்துள்ளன.

திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ புதிய வாக்காளர்களை வந்துகொண்டிருக்கின்றனர்.

அதுதான் உண்மை. பிஹாரில் தேர்தல் ஆணையம் செய்ததைப் போல, தமிழ்நாட்டில் யார் எப்படிப்பட்ட சதி செய்தாலும் அதை முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டுக்கு உண்டு. பிஹாரிலும் கூட மக்களை எழுச்சிப் பெற வைக்க தேர்தல் ஆணையம் உதவி செய்திருக்கிறது”என்று தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *