மக்களுடைய வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!! எல்.முருகன்….

சென்னை;
மக்களுடைய வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில், “மக்களை ஏமாற்றுவதில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் தான் இந்தப் ‘போலி திராவிட மாடல்’ ஆட்சியாளர்கள். அதற்கு சான்றாக, சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், வைகை ஆற்றில் கொட்டப்பட்டிருப்பது ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அரக்க குணத்தை அப்பட்டமாக்கியுள்ளது.

அரசின் திட்டங்களுக்கு விதவிதமாக பெயர் வைப்பதையும், விளம்பரம் செய்வதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டவர்கள், குறைந்தபட்சம் அதற்கு செலவு செய்த மக்கள் வரிப்பணத்தை, நலத்திட்டங்களுக்கு வழங்கியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போனாராம்” என்ற கதையாய், சொந்த மாநிலத்தில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆற்றில் எறிந்துவிட்டு, முதலீடுகளை ஈர்க்க நாளை ஜெர்மனி போகிறாராம் முதல்வர் ஸ்டாலின்.

தாங்கள் சொல்வதெல்லாம் தண்ணீரில் எழுதுவது போன்றது தான் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்தச் செயல் அமைந்துள்ளது.

தங்களது ஆட்சியில் பாலரும் தேனாறும் பாயுமென்று பொய்யுரைத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே, மக்களின் குறைகளை வைகை ஆற்றில் மிதக்க விடுவது தான் உங்கள் ‘போலி திராவிட மாடல்’ ஆட்சியின் லட்சியமா?இம்மாதிரியான செயலுக்கு தமிழக அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழக மக்களின் வரிப்பணத்தை வைத்து நீங்கள் விளம்பரம் தேடிக் கொள்வதற்கெல்லாம் சேர்த்து, வருகின்ற 2026 தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *