டெல்லி;
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்து வருகிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்திருந்தார்.
இந்த நிலையில் மகளிர் தின பரிசாக நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு சிறப்பு பரிசு ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதன்படி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூபாய் 100 குறைக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி,
“இன்று மகளிர் தினம். நமது அரசு எரிவாயு சிலிண்டர் விலையை ரூபாய் 100 குறைக்க முடிவு செய்துள்ளது. இது லட்சக்கணக்கான இல்லத்தரசிகளின் பொருளாதார சுமையை வெகுவாக குறைக்கும்.
குறிப்பாக நமது பெண்களுக்கு எரிவாயு சிலிண்டர் விலை குறைவாக கிடைப்பதன் மூலம் குடும்பங்களின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு வழிவகுக்கும். பெண்களை வலிமைப்படுத்துவது மற்றும் வாழ்வியலை எளிமையாக்குவது என்ற நமது குறிக்கோளை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளில் ஒன்று இது” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமரின் இந்த அதிரடி அறிவிப்பு இல்லத்தரசிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அதே சமயம் பாஜகவை எதிர்த்து அரசியல் செய்யும் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.