திருப்பதி
வைணவ ஆச்சாரியார் திருமலைநம்பியின் 1052-வது அவதார மகோற்சவம் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவில் தெற்கு மாடவீதியில் அமைந்துள்ள திருமலை நம்பி கோவிலில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக 16 அறிஞர்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து திருமலை நம்பியின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகள் குறித்து சொற்பொழிவாற்றினர்.
ராமானுஜரின் தாய்மாமனான திருமலை நம்பி திருமலைக்கு வந்து, ஏழுமலையானுக்கு பல்வேறு புஷ்ப கைங்கர்யம் செய்துள்ளார். ஏழுமலையானின் முதன்மையான பக்தர்களில் ஒருவராக திருமலைநம்பி திகழ்ந்தார். அவர், முதன்முதலில் திருப்பதி ஏழுமலையானுக்கு தீர்த்த கைங்கர்யத்தை செய்து அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆச்சாரிய புருஷராகப் போற்றப்பட்ட திருமலைநம்பி, அபிஷேகத்துக்காக புனிதநீரை கொண்டு வந்து ஏழுமலையானுக்கு சிறப்பு சேவை செய்தார். அவர் தொடங்கி வைத்த அபிஷேக சேவை இன்று வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் இந்து தர்ம திட்டங்கள் துறை அதிகாரி ராஜகோபால் மற்றும் வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள், அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.