ஆசிரியர் தின விழாவில் 386 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது – துணை முதல்வர் உதயநிதி!!

சென்னை:
சென்னையில் நடைபெறவுள்ள ஆசிரியர் தின விழாவில் 386 ஆசிரியர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி மாநில நல்லாசிரியர் விருது வழங்கவுள்ளார்.

மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து `டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரப்படுத்தி வருகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு ரூ.10,000 ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

அதன்படி, நடப்பாண்டு மாநில நல்லாசிரியர் விருதுக்கு 386 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 342 பேர் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், 38 பேர் தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகள் மற்றும் மாற்றுத் திறனாளி ஆசிரியர்களில் தலா 2 பேர் என மொத்தம் 386 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னையில் செப்.5-ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு விருது வழங்கவுள்ளார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதிக மாணவர் சேர்க்கை, கற்பித்தலில் புதுமை, பள்ளிகளின் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் சிறந்த பங்களிப்பு போன்ற மாணவர்கள், அரசுப் பள்ளிகள் நலன் சார்ந்து சிறந்த பங்களிப்புகளை வழங்கிய ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *