சென்னை,
அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டை யனுக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது.
இதற்கிடையே கடந்த 1-ந்தேதி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செங்கோட்டையன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேச உள்ளேன் என கூறினார்.
அதன்படி நேற்று காலை 10 மணியளவில் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ‘கெடு’ விதித்துள்ளார்.
அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலசோனையில் ஈடுபட்டார் .
திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விஸ்வநாதன் கேபி முனுசாமி எஸ் பி வேலுமணி காமராஜ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனையில் கலந்து கொண்டனர் .
இந்த நிலையில் அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் கே.ஏ. செங்கோட்டையன், எம்.எல்.ஏ. இன்று முதல் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.என தெரிவிக்கப்பட்டுள்ளது .