கோயம்புத்தூர்
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கினார்.
தொடர்ந்து அவர் மாநிலம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 4-வது கட்ட பிரசாரத்தை கடந்த 1-ந் தேதி மதுரையில் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தை மேற்கொண்டார்.
இந்தநிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) எடப்பாடி பழனிசாமி கோவையில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள்.
அவர் மாலை 4.45 மணிக்கு செல்வபுரத்தில் ரோடு ஷோ செல்கிறார். 5.30 மணிக்கு தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அங்கிருந்து ராமசெட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர், கோவைப்புதூர் வழியாக குனியமுத்தூர் சென்று பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
தொடர்ந்து ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவு வழியாக சுந்தராபுரம் சென்று 6.45 மணிக்கு மக்கள் மத்தியில் பேசுகிறார். அதன்பிறகு ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி, கிணத்துக்கடவு வழியாக செல்லும் அவருக்கு கோதவாடி பிரிவில் இரவு 9.20 மணிக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
பின்னர் இரவு பொள்ளாச்சி செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு பொள்ளாச்சி நகர எல்லையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாளை(புதன்கிழமை) பொள்ளாச்சி, வால்பாறை, திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
அதன்பின்னர் வருகிற 11-ந் தேதி மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் தொகுதியிலும், 12-ந் தேதி திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம் தொகுதிகளிலும் தீவிர சுற்றுப்பயணம் செய்யும் எடப்பாடி பழனிசாமி, 13-ந் தேதி மீண்டும் கோவை வருகிறார்.
அன்று காலை 11 மணிக்கு தொழில்துறையினருடன் கலந்துரையாடல் நடத்தும் அவர், பீளமேடு ஜி.வி. ரெசிடென்சி வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
தொடர்ந்து சூலூர் செல்லும் அவர் மாலை 6.30 மணிக்கு பழைய பஸ் நிலையத்தில் திறந்த பஸ்சில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அதன்பிறகு காரணம்பேட்டை, கருமத்தம்பட்டி வழியாக ஓசூர் ரோடு அவினாசியில் பேசுகிறார். தொடர்ந்து அவர் சேலம் புறப்பட்டு செல்கிறார்.