மதுரை:
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தாயார் மீனாள் அம்மாளின் படத்தை கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று திறந்துவைத்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தாயாரும், போஸ் தேவரின் மனைவியுமான மீனாள் அம்மாள் ‘அம்மா சாரிடபிள் டிரஸ்ட்’ பொருளாளராக இருந்தார்.
உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த மீனாாள் அம்மாள் கடந்த 8-ம் தேதி காலமானார். இதையடுத்து, அவரது உடல் மதுரை திருமங்கலம் அருகில் உள்ள டி.குன்னத்தூரில் ஜெயலலிதா நினைவு மண்டப வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மீனாள் அம்மாளின் படத் திறப்பு நிகழ்ச்சி டி.குன்னத்தூர் ஜெயலலிதா நினைவு மண்டப வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்று, மீனாள் அம்மாளின் படத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, அவரது படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவர் முத்துராமலிங்கம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செல்லூர் கே.ராஜு, ராஜேந்திர பாலாஜி, மணிகண்டன், எம்எல்ஏ-க்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், முன்னாள் எம்எல்ஏ டாக்டர் பா.சரவணன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, அதிமுக கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், பார்வர்டு பிளாக் நிர்வாகி கதிரவன், பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்.பி.உதயகுமார், ஆர்.பி.யோகீஸ்வரன், எம்.மாரீஸ்வரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.