மதுரை:
திமுகவில் ஜனநாயகம் இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி பூத் கமிட்டி மாநாடு மதுரை அண்ணாநகரில் நேற்று நடைபெற்றது.
மாநகர் மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி தலைமைவகித்தார். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள் முன்னிலை வகித்தார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்வது அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் சேர்ந்து முடிவெடுக்கின்றனர்.
ஆனால் ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்வதாக தமிழக அரசு குறைகூறி வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியது அவரது சொந்தக் கருத்து. இதே டிடிவி.தினகரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா யார் முதல்வர் என்று சொல்கிறாரோ அவருக்காக பிரச்சாரம் செய்வேன் என்று முன்பு கூறியுள்ளார்.
அதிமுகவில் ஜனநாயகம் உள்ளது. இதனால் அதிமுகவினர் அனைவரும் டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திக்கின்றனர். திமுகவில் ஜனநாயகம் இல்லை என்று கூறினார்.