திருச்சி:
மதிமுக தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபித்து அங்கீகாரம் பெறுவோம் என அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. தெரிவித்தார்.
அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி திருச்சி சிறுகனூரில் மதிமுக மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. மதிமுக ஆட்சிமன்றக் குழுச் செயலாளர் சி.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன் வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா ஷேக் முகமது கட்சிக் கொடியேற்றி வைத்தார். எம்எல்ஏ சின்னப்பா, அண்ணா சுடர் ஏற்றி வைத்தார்.
எம்எல்ஏ பூமிநாதன் மாநாட்டு மேடையையும், மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா.சோமு திராவிட இயக்க வரலாற்று கண்காட்சியையும், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் ரோவர் கே.வரதராஜன் திராவிட இயக்க மூவர் படத்தையும், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் செ.துரைராஜ் பெரியார் படத்தையும், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.கலியமூர்த்தி அண்ணா படத்தையும், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் மொழிப்போர் தியாகிகள் படங்களையும் திறந்து வைத்தனர்.
முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. பேசியது: நாங்கள் பட்டம், பதவிகளுக்காக அரசியலுக்கு வரவில்லை. பொருள் ஈட்ட பொதுவாழ்வுக்கு வரவில்லை.
வைகோ என்ற ஒருவருக்காக இயக்கத்தில் உள்ளோம். அவரது தன்னலமற்ற மக்கள் பணிக்கு பக்கபலமாக உள்ளோம். மத்திய பாஜக அரசு மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்கப்பார்க்கிறது.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடித்தளத்தை தகர்த்து, பன்முகத்தை சிதைத்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் அது இந்து மதம், ஒரே கலாச்சாரம் அது சங்பரிவார் கலாச்சாரம் என்று திணிக்க முயல்கிறது. பாஜக அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கைக்கும் வேட்டு வைத்துவிட்டது.
தலைவர் வைகோவின் சாதனைகள், தியாகங்களுக்கு பின்னால் தொண்டர்கள், நிர்வாகிகள் இருக்கிறீர்கள். தாயின் அன்பை விட பரிசுத்தமான ஒன்று மதிமுக சொந்தங்களின் அன்பு தான். என் தந்தை எனக்கு வழங்கிய மிகப்பெரிய சொத்து மறுமலர்ச்சி சொந்தங்களின் அன்பு தான். தமிழக அரசியல் களத்தில் மதிமுக தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபித்து அங்கீகாரம் பெறுவோம் என்றார். மாநாட்டில், வைகோவின் 60 ஆண்டுகால சாதனை வரலாறு 4 நிமிட காணொலி ஒளிபரப்பப்பட்டது.
…