கேரளாவை அலற விடும் மூளையை தின்னும் அமீபா – வருவது எப்படி? அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் என்ன ?

கேரளா ;
அதிக உயிரிழப்பு ஆபத்துகளை கொண்ட மூளையை தின்னும் அமீபாவின் (Primary Amoebic Meningoencephalitis) பரவல் அதிகமாகி வருவதை அடுத்து கேரள அரசு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

இந்தாண்டு மட்டும் கேரளாவில்  மொத்தம் 61 பேர் மூளையை தின்னும் அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த உயிரிழப்புகள் கடந்த சில வாரங்களில்தான் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், “தீவிரமான பொது சுகாதார பிரச்னையை தற்போது கேரளா எதிர்கொண்டு வருகிறது. இந்த தொற்று முன்னர் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் அதிகமாக காணப்பட்டது, தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தென்படுகிறது.

மூன்று மாத குழந்தை முதல் 91 வயதானவர் வரை இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டைப் போல இல்லாமல், ஒற்றை தண்ணீர் நீர் ஆதாரத்துடன் தொடர்புடைய நோய் பரவலை நாங்கள் கண்டறியவில்லை. மாறாக, இந்த பரவல் அனைத்தும் தனித்தனியாக காணப்படுகிறது. இது தொற்றுநோயியல் விசாரணையை கடினமாக்குகிறது” என்றார்.

மூளையை தின்னும் அமீபா நோய் (PAM) என்பது கேரள ஆவணங்களின்படி மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியதாகும். மேலும், “இந்த தொற்று மூளையின் திசுக்களை அழித்து, மூளையில் கடுமையான வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

இது பெரும்பாலனோரின் உயிரை பறிக்கும். இது அரிய வகை நோயாகும், மேலும் இது ஆரோக்கியமான குழந்தைகள், சிறார்கள், பதின்ம வயதினர், வயதில் முதிர்ந்தவர்களிடம் ஏற்படுகிறது” என ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூளையை தின்னும் அமீபா சூடான, மற்றும் தேங்கிய நன்னீரில் தான் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசுத்தமான தண்ணீரை வாய்வழியாக உட்கொள்வதற்கும் இந்நோய்க்கும் தொடர்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சுத்தமான நீர்நிலைகளில் நீச்சல் அடிப்பது, குளிப்பது போன்றவற்றால் இந்த நோய் ஏற்படும் அபாயம் எனலாம். அதாவது, மூளையை தின்னும் அமீபா அந்த தண்ணீரில் இருக்கும்பட்சத்தில் ஆபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொற்று பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது.  மூளையை தின்னும் அமீபா நோயால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் உயிரிழக்கின்றனர்.

அவர்கள் அவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி போன்றவையே அறிகுறியாக உள்ளது.

ஆனால், பாக்டீரியா மூளைக்காய்ச்சலுக்கும் இதுவே அறிகுறி. எனவே சில நாள்களுக்கு பிறகே பொதுவான மூளைக்காய்ச்சலா அல்லது மூளையை தின்னும் அமீபா நோயா என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

ஆனால், இது பெரும்பாலும் தாமதமாகிவிடுகிறது. அதற்குள் நோயின் தீவிரம் அதிகமாகி, நோயாளிகள் உயிரிழந்துவிடுகின்றனர்.

வெப்பமான மாதங்களிலும், பொதுவாக தேங்கி நிற்கும் நன்னீரில் குளித்த, நீச்சல் அடித்தவர்களிடம் இந்த PAM அதிகமாகக் காணப்படுகிறது.

அறிகுறிகள் ஒன்று முதல் ஒன்பது நாட்களுக்குள் தோன்றும். மேலும் அவற்றின் கடுமையான தாக்கம் சில மணிநேரங்கள் முதல் 1-2 நாட்களில் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

ஒருவேளை நீங்கள் நன்னீரில் குளித்து, அதன்பின் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே மருத்துவமனையை அணுக அரசு அறிவுறுத்தி உள்ளது. 

கடந்த 2016ஆம் ஆண்டு முதல்முறையாக கேரளாவில் இந்த நோய் கண்டறியப்பட்டது. தொடர்ந்து, 2023ஆம் ஆண்டுவரை வெறும் 8 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். ஆனால் கடந்தாண்டு இந்த நோய் கடுமையாக பரவியது.

அதன் விளைவாக மொத்தம் 36 பேர் பாதிக்கப்பட்டு 9 பேர் உயிரிழந்தனர். ஆனால் இந்தாண்டில் இதுவரை மட்டும் 69 பேர் பாதிக்கப்பட்டு, 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *