பாட்னா,
பீகாரில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசார வேலைகளை ஆரம்பித்து விட்டன. பிரதமர் மோடி கடந்த 5 மாதத்தில் 5 முறை பீகாருக்கு சென்று பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் பாஜக கூட்டணி களம் காண்கிறது. ஏற்கனவே அங்கு அந்தக் கூட்டணி ஆட்சியில் இருப்பதால், மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பதில் நிதீஷ் குமார் திட்டமிட்டு வருகிறார்.
இந்த சூழ்நிலையில், வாக்காளர்களை கவரும் விதத்தில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கடந்த சில மாதங்களாகவே சில முக்கிய அறிவிப்புகளை ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறார். முதலில், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை 400 ரூபாயிலிருந்து 1,100 ரூபாயாக அதிகரிப்பதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் மாணவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கல்விக் கடன்கள் அனைத்துக்கும் வட்டி தள்ளுபடி செய்யப்படும். மாணவர்கள் கல்வி கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலமும் அதிகரிக்கப்படும்.
அதன்படி, ரூ.2 லட்சம் வரை கல்வி கடன் பெற்ற மாணவர்கள் அதனை திருப்பிச் செலுத்துவதற்கான காலம் இப்போது ஐந்து ஆண்டுகளாக இருக்கும் நிலையில் அது ஏழு ஆண்டுகளாக (84 மாத தவணைகள்) நீட்டிக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்தநிலையில் நிதிஷ் குமார் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:, பீகாரில் வேலை வாய்ப்பற்ற 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு 2 ஆண்டுகள் வரை மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று அதில் அறிவித்துள்ளார். இது பீகார் இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.