சென்னை
பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
இந்த விழாவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவுநிலைப் பயிற்சியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பயிற்சிக் கையேட்டினை வெளியிட்டார்.
தொடர்ந்து ரூ.277 கோடி மதிப்பீட்டில் சென்னை – காமராஜர் சாலையில் பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, அரியலூர்,பெரம்பலூர், தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, விருதுநகர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 243 பள்ளிகளில் கட்டப்படவுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர் உள்ளிட்ட இதர கட்டடங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
மேலும் ரூ.94 கோடியில் அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 59 பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர் மற்றும் இதர கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஸ், கே.என். நேரு, மா.சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.