வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? – விஜய் கேள்வி!!

நாகப்பட்டினம்
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தனது முதல்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கிய அவர் இன்று நாகையில் 2-ம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

நாகை பிரசாரத்திற்காக சென்னையில் இருந்து இன்று காலையில் விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த விஜய், அங்கிருந்து தனது பிரசார வாகனத்தில் நாகை புறப்பட்டார்.

இந்த நிலையில் நாகை புத்தூர் ரவுண்டானா அருகே உள்ள அண்ணாசிலை சந்திப்பு பகுதிக்கு வருகை தந்த விஜய் அங்கு பரப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணாவுக்கு வணக்கம். பெரியாருக்கு வணக்கம். நாகூர் ஆண்டவர் அன்போடு, நெல்லுக்கடை மாரியம்மன், அன்னை வேளாங்கண்ணி ஆசியோடு, கடல்தாய் மடியில் இருக்கிற என் மனதுக்கு நெருக்கமான நாகப்பட்டினம் மண்ணிலிருந்து பேசிக் கொண்டு இருக்கிறேன். என்றும் மீனவ நண்பனாக இருக்கிற விஜய்யின் அன்பு வணக்கம்.

எந்த பக்கம் திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கிற ஊர் நாகப்பட்டினம். மதவேறுபாடு இல்லாத, அனைவருக்கும் பிடித்துப்போன, மதசார்புகளற்று வாழும் மக்கள் நாகை மக்கள்.

மீன் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருப்பது நாகப்பட்டினம் துறைமுகம். குடிசைப் பகுதிகள் அதிகம் இருக்கும் ஊர் நாகப்பட்டினம்.

இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதையும், அதற்கான காரணம், தீர்வு குறித்தும் மதுரை மாநாட்டிலேயே பேசியிருந்தேன். மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும், அவர்களோடு நிற்பதும் நமது உரிமை; கடமை. விஜய் களத்துக்கு வருவது ஒன்றும் புதிதில்லை.

முன்பு விஜய் மக்கள் இயக்கமாக வருவோம். இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கமாக வந்து நிற்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம்.

மீனவர்களுக்கு குரல் கொடுக்கும் இந்த வேளையில், நம் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள், இலங்கையில் இருந்தாலும் அல்லது உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் அவர்களுக்காக குரல் கொடுப்பதும், நிற்பதும் நம் கடமை.

மீனவர்களின் உயிர் எந்தளவுக்கு முக்கியமோ, அந்தளவுக்கு ஈழத்தமிழர்களின் கனவுகளும், வாழ்க்கையும் நமக்கு மிகவும் முக்கியம். மீனவர்கள் படும் கஷ்டத்தை பார்த்து, கடிதம் எழுதிவிட்டு அமைதியாக போவதற்கு நாம் ஒன்றும் கபட நாடக திமுக அரசும் கிடையாது.

மற்ற மீனவர்கள் என்றால் இந்திய மீனவர்கள்; நமது மீனவர்கள் என்றால் தமிழ்நாட்டு மீனவர்கள் என்று பிரித்து பார்த்து பேசுவதற்கு நாம் பாசிச பாஜக அரசும் கிடையாது. நிரந்த தீர்வு காண்பதுதான் நமது இலக்கு.

ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுவிட்டு வரும்போதெல்லாம், இத்தனை கோடி முதலீடு என்று முதல்-அமைச்சர் சிரித்துகொண்டே சொல்வாரே! சி.எம். சார் மனதை தொட்டு சொல்லுங்கள் வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் முதலீடா? இல்லை உங்கள் குடும்பத்தின் முதலீடு வெளிநாட்டுக்கு போகிறதா? இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *