அம்பாளுக்கு உகந்த விரதங்களில் நவராத்திரி விரதம் மிகவும் சிறப்புடையதாகும். புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி நவமி வரையில் ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இவ்விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமானப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள்.

அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நவராத்திரியை கொண்டாட உங்களுக்கான சில பயனுள்ள குறிப்புகளை பார்ப்போம்…
- கொலு பொம்மைகளை பெட்டியிலிருந்து எடுத்து தூசி தட்டி, சிறுதுண்டு பஞ்சில், கெரசின் விட்டு ஒற்றியெடுத்து சுத்தம் செய்து விபூதி தடவி துடைத்துவிட்டால், புதிய பொம்மை போல் ‘பளிச்’சென்று இருக்கும்.
- கொலுவில் மலைகள் அமைத்த பின், அவற்றின் மேல் சிறிதளவு பஞ்சை மேலிருந்து கீழாக ஒட்டி வைத்தால், தள்ளி நின்று பார்க்கும்போது மலையில் இருந்து அருவி கொட்டுவது போல் இருக்கும்.
- விதவிதமான மெட்டீரியலில் எவ்வளவு பொம்மைகள் வாங்கினாலும் மரப்பாச்சி பொம்மைகள் கட்டாயம் நம் வீட்டுக் கொலுவில் இடம்பெற வேண்டும்.
- நவராத்திரிக்கு கொலு பார்க்க வரும் பெண்களுக்கு லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, சவுந்தர்யலஹரி போன்ற சுலோக புத்தகங்களை கொடுக்கலாம்.
- ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை இதில் புகுத்தக்கூடாது. பாரபட்சமின்றி, அழைக்கப்படுகின்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான உபசரிப்பு, தாம்பூலம், வரவேற்பு இருத்தல் வேண்டும்.
- கொலு வைப்பது என்பது உறவை மேம்படுத்தவும், அன்பைப் பெருக்கவும், பாரம்பரிய கலாசாரத்தை கடைபிடிக்கவும்தான் என்பதை உணர்ந்து வைக்க வேண்டும். வெறும் பகட்டுக்காக மட்டும் வைக்கக் கூடாது. மனித நேயம் வளர அது துணைபுரிய வேண்டும்.
- வீட்டில் வேலை செய்யும் பெண்கள், சமையல் வேலை செய்வோரை கண்டிப்பாக கொலு பார்க்க அழைத்து மஞ்சள், குங்குமத்துடன் பணம் வைத்துக் கொடுங்கள்.
- வீட்டில் பாட்டி, தாத்தா இருந்தால், குழந்தைகளை உட்கார வைத்து கொலுவில் உள்ள சுவாமிகளை சுட்டிக்காட்டி, புராணக் கதைகள் சொல்ல வைக்கலாம்.
- இந்த நவராத்திரி ஒன்பது நாட்களிலும், உங்கள் வீட்டு பெண் பிள்ளைகளை மாலை நேரத்தில் நவீன உடைகளை தவிர்த்து, அழகாக பட்டுப் பாவாடை உடுத்தி, வளையல், பூ, பொட்டுடன் இருக்க வலியுறுத்துங்கள்.
- கொலு பார்க்க வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்று, வெற்றிலை பாக்கு, மஞ்சள் கொடுத்து மனநிறைவுடன் மங்கலமாக அனுப்பி வையுங்கள்.
- மாலையில் தீபம் ஏற்றும் முன்பு திரி நூல்களை ஒரு மணி நேரம் முன்பே கட் செய்து, ஒரு கப்பில் நாலு ஸ்பூன் எண்ணெய் விட்டு ஊறவைத்து விட வேண்டும். பின் அகல் விளக்கில் அந்தத் திரிநூலை எடுத்து எண்ணெய் விட்டு ஏற்றினால் விளக்கு நன்றாக நின்று எரியும்.
- வேலைக்குப் போகும் பெண்களுக்கு தினமும் சுண்டல் செய்வது கஷ்டமாக இருக்கும். நவராத்திரி ஆரம்பிக்கும் முன் பொட்டுக்கடலை உருண்டை, வேர்க்கடலை உருண்டை போன்றவற்றை செய்து வைத்துக்கொண்டால் சமயத்துக்கு உதவும்.
- நவராத்திரி பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை டம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள். வெற்றிலை வைத்தபடி வாடாமல் இருக்கும்.
- கொலு சமயத்தில் மாலையில் வாங்கும் மல்லிகைப்பூ மறுதினத்துக்கும் வாடாமல் இருக்க, ஒரு பாத்திரத்தை நீரில் முக்கி எடுத்து, அதில் பூக்களை வைத்து மூடி வைக்கவும். மறுநாள் வரை பூக்கள் வாடாமல் புதியதாக மணமுடன் இருக்கும்.
- நவராத்திரி ஒன்பது நாட்களும் வீட்டில் ஒட்டடை அடிக்கக் கூடாது. ஊசியை தொடக்கூடாது. ஊசி முனையில் அம்பாள் தவமிருப்பதாக ஐதீகம்.