“அரசியல் பலத்தை காட்டவே விஜய் திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதமாக வந்தார்” – போலீஸ் எஃப்ஐஆரில் தகவல்!

சென்னை:
அரசியல் பலத்தை காட்டவே விஜய் திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதமாக வந்தார் என்று கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக போலீஸ் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.

இதனிடையே, கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறை எஃப்ஐஆரில் பதிவு செய்துள்ள பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதில், “விஜய் அரசியல் பலத்தை காட்ட திட்டமிட்டு 4 மணி நேரம் தாம‌தமாக வந்துள்ளார்.

மரக் கிளைகளிலும், கடை கொட்டகைகளிலும் தொண்டர்கள் ஏறி அமர்ந்தனர். மரக்கிளை முறிந்ததால் கீழே நின்றவர்கள் மீது விழுந்தனர். பல இடங்களில் நிபந்தனைகள் மீறப்பட்டன.

தவெக கட்சி நிர்வாகிகள் இதை எதையும் கண்டு கொள்ளவில்லை. மெயின்ரோடு வழியாக வந்து காலதாமதமாக, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தி நிபந்தனையை மீறினர்.

தவெக நிர்வாகிகள் ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரிடம் பலமுறை எச்சரித்தும் அவர்கள் அதை கேட்கவேவில்லை. இச்சம்பவத்தில், 2-வது குற்றவாளியாக ஆனந்த், 3-வது குற்றவாளியாக நிர்மல்குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். தண்ணீர், மருத்துவ வசதிகள் முறையாக இல்லை. கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அழுத்தத்தால் மக்கள் உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டது.

கீழே விழுந்தவர்கள் மிதிபாடுகளில் சிக்கி மட்டுமே 11 பேர் உயிரிழந்தனர்” என்பது உள்ளிட்ட பல தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *