ராஜபாளையம்:
தென் மாவட்டங்களில் பஞ்ச ஸ்தலங்கள் என்று அழைக்கப்படும் ராஜபாளையம் அருகே உள்ள சிவாலயங்களில் விடிய, விடிய பூஜைகள் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்தலங்களுக்கு சென்று விடிய, விடிய தரிசனம் செய்தனர்.
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட ஸ்தலங்கள் விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களை அடங்கியதாக இருந்து வருகிறது.
நீரை அடிப்படையாகக் கொண்ட கோவில் தென்காசி மாவட்டம் தாருகாபுரம் மத்தியஸ்தநாதர் குழல்வாய் மொழியம்மை சமேதராய் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இங்கு ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் மற்றும் சிவனடியார்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிலத்தை அடிப்படையாக கொண்ட கோவில் சங்கரன்கோவில் சங்கரநாராயணர்-கோமதி அம்மன் சமேதராய் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். கோவில் வளாகத்தில் 1008 தீபங்களை லிங்க வடிவில் ஏற்றி வைத்ததை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நெருப்பை அடிப்படையாகக் கொண்ட கரிவலம் வந்தநல்லூர் பகுதியில் உள்ள பால் வண்ண நாதர் ஒப்பனை அம்மன் சமேத ராய் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். பாலில் தேங்காய் கலந்து சர்க்கரை சேர்த்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காற்றை அடிப்படையாகக் கொண்ட தென்மலை திரிபுர நாதேஸ்வரர், சிவபரி பூரணி அம்மாள் சமேதராய் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
சிவபெருமான் முன்பு உள்ள தீபங்களில் அனைத்து தீபங்களும் அமைதியாக இருக்க மேலே உள்ள ஒரே ஒரு தீபம் மட்டும் காற்றில் லேசாக ஆடிக்கொண்டே இருப்பது இந்த கோவிலில் சிறப்பபாகும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
ஆகாயத்தை அடிப்படையாகக் கொண்ட விருதுநகர் மாவட்டம் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி-தவம் பெற்ற நாயகி சமேதராய் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
ஏராளமான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து அதிகாலை வரை தொடர்ச்சியாக பூஜை நடத்தப்பட்டு தரிசனம் செய்தனர்.
அன்ன தானமும் வழங்கப்பட்டது.போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.