சென்னை;
சென்னை மேடவாக்கம் அருகே அரசன் கழனி என்னும் ஊரில் அமைந்துள்ளது பெரியநாயகி சமேத கல்யாண பசுபதீஸ்வரர் கோவில். மூலிகைகள் நிறைந்த ஔஷத மலை அடிவாரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவனை அகத்தியர் பூஜை செய்து வழிபட்டதாக கருதப்படுகிறது.
கயிலாயத்தில் இருந்து தென்திசை நோக்கி பயணித்த அகத்திய மகரிஷி, தாம் பயணித்த வழிகளில் உள்ள சுயம்பு லிங்கங்களை ஞான திருஷ்டி மூலம் கண்டறிந்தார். அவற்றைப் பூஜித்து வழிபட்டவர், சுயம்பு லிங்க வழிபாட்டின் மகத்துவத்தை, அப்பகுதியில் வாழ்ந்த மக்களிடம் எடுத்துரைத்தார்.
அத்துடன் ஆங்காங்கே செழிப்பாக வளர்ந்திருந்த மூலிகை செடிகளின் மருத்துவ குணத்தைக் கண்டறிந்து, அங்குள்ளவர்களின் நோய்களைக் குணப்படுத்தினார். மேலும் வறட்சி நிலவிய பகுதிகளில் தமது தெய்வீக ஆற்றலால் நீர்நிலைகளை உருவாக்கி அப்பகுதிகளை செழிப்பாக்கி வந்தார்.
தொண்டை மண்டலத்திற்கு அகத்திய மகரிஷி வருகை புரிந்தபோது, செழிப்புற்றிருந்த அரசன்கழனி என்ற இடத்தை கண்டார். அந்த பகுதியின் செழுமையும் பசுமையும் அகத்தியருக்கு அளவில்லா ஆனந்தத்தைத் தந்தன.
அங்குள்ள ஔஷத மலையில் அரிய மூலிகைச் செடிகள் வளர்ந்திருப்பதையும், மக்கள் நோயால் வாடுவதையும் கவனித்தார். ஒளஷத மலையில் வளர்ந்திருந்த எலும்பு ஒட்டித் தழை, நத்தை சூரி, செந்நாயுருவி, ஆள் மிரட்டி, பேய் மிரட்டி, கோபுரந்தாங்கி போன்ற இன்றியமையாத மூலிகைச் செடிகளை மருந்தாக்கி நோய்வாய்ப்பட்டவர்களைக் குணப்படுத்தி வந்தார்.
மேலும் அரசன்கழனியில் இருந்த சுயம்பு லிங்கத்தை தமது ஞான திருஷ்டி மூலம் கண்டறிந்தார். அங்குள்ள நீர்நிலையிலிருந்து நீர் எடுத்துவந்து சுயம்பு லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு மகிழ்ந்தார்.
அரசன் கழனியில் வசித்த மக்களிடம் சிவபெருமானின் பெருமைகளையும், சித்த மருத்துவ சிறப்புகளையும் விவரித்து ஆரோக்கியமாக வாழ வழிகாட்டினார். அதன்பிறகு தமது தென்திசைப் பயணத்தைத் தொடர்ந்தார்.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
அகத்தியர் பூஜித்து வழிபட்ட சிவலிங்கம் தற்போது கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலாக விளங்குகிறது. இப்பகுதி வேளாண்மை செழிப்புள்ளதாகவும், மன்னர்கள் அரசாளும் பகுதியாகவும் விளங்கியதால் ‘அரசன் கழனி’ என்று அழைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இங்குள்ள மூலிகைச் செடிகள் நிறைந்த மலை ஒளஷத மலை, சித்தர் மலை ஆகிய பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. இந்த மலை சித்தர்களின் வசிப்பிடமாக விளங்கியதால், அருகில் உள்ள பகுதி ‘சித்தர்பாக்கம்’ என்று அழைக்கப்பட்டதாகவும், அப்பெயரே ‘சித்தாலப் பாக்கம்’ என்று மருவியதாகவும் கூறப்படுகிறது.
இந்த மலையே சிவலிங்கமாக கருதப்படுவதால் இம்மலையில் சித்தர்கள் சூட்சும வடிவில் உலவுவதாக நம்பப்படுகிறது. கார்த்திகைத் தீபத்தன்று இந்த மலை உச்சியில் தீபமேற்றி வழிபடுகிறார்கள். பௌர்ணமி தோறும் மாலை வேளையில் இந்த ஒளஷத மலையை வலம்வந்து, அகத்தியர் பூஜித்த கல்யாண பசுபதீஸ்வரரை வணங்குகிறார்கள்.
இந்த பௌர்ணமி கிரிவலத்தில் கலந்துகொண்டு பெரிய நாயகி சமேத கல்யாண பசுபதீஸ்வரரை வழிபடுவோர் உடல்நோய், மனநோய் நீங்கி ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
திருமணம் ஆகாதவர்கள் கோவில் அருகிலுள்ள அகத்தியர் தீர்த்தத்தில் நீராடிவிட்டு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
மேலும் முற்பிறவியில் செய்த பாவம் காரணமாக தொடர் கஷ்டம், தொழில் நஷ்டம், வறுமை போன்ற சிக்கல்களால் அவதிப்படுபவர்கள் இங்கு தொடர்ந்து மூன்று பிரதோஷ நாளில் கல்யாண பசுபதீஸ்வரரை வழிபட்டால் அவற்றில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
கோவில், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
வேளச்சேரி – கிழக்குத் தாம்பரம் சாலையில் மேடவாக்கம் சந்திப்பில் இருந்து 3 கி.மீ. தொலைவில் ஒட்டியம்பாக்கம் என்னும் ஊருக்கு செல்லும் வழியில் சித்தாலப்பாக்கம் பகுதியில் இக்கோவில் மற்றும் ஒளஷத மலை உள்ளது.