கன்னியாகுமரி
திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்திருந்தது. அப்போது பத்மநாபபுரம் அரண்மனையை தலைமை இடமாகக் கொண்டு மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர்.
அவர்களின் ஆட்சிக் காலத்தில், அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்து ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வந்தது. 1840-ம் ஆண்டு மன்னர் சுவாதி திருநாள் காலத்தில் சமஸ்தானத்தின் தலைநகரானது பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நவராத்திரி விழாவும், திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஆண்டுதோறும் குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்தில் உள்ள தேவாரக்கெட்டு சரஸ்வதி தேவி, குமாரகோவில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நவராத்திரி விழா நடத்தப்பட்டது. இந்த நடைமுறை பாரம்பரிய மரபு முறைபடி மன்னர் ஆட்சிக்கு பின்னரும் தொன்று தொட்டு இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், பத்மநாபபுரம் அரண்மனையில் அமைந்துள்ள தேவாரக் கட்டு சரஸ்வதி தேவி கோவிலில் உள்ள சரஸ்வதி தேவி, வேளிமலை குமார கோயில் முருகன் ஆகிய சாமி விக்ரகங்கள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து கடந்த மாதம் 20-ம் தேதி புறப்பட்டன.
சாமி ஊர்வலத்தோடு மன்னர்கள் பயன்படுத்திய உடை வாளும் கொண்டு செல்லப்பட்டது. இந்த உடைவாளை எடுத்து கொடுக்கும் (கைமாற்றும்) நிகழ்ச்சி பத்ம நாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகை பூஜை அறையில் நடந்தது. பின்னர் சரஸ்வதி தேவி நெற்றிப்பட்டம் கட்டிய யானையில் எழுந்தருளி புறப்பட்டுச் சென்றார்.
அலங்கரிக்கப்பட்ட இரண்டு பூ பல்லக்குகளில் அமர்ந்திருந்த வேளிமலை முருகனும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மனும் அங்கிருந்து புறப்பட்டு பத்மநாபபுரம் அரண்மனைக்கு சென்றடைந்தனர்.
சாமி சிலைகளுக்கு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையிலான தமிழக போலீசாரும், திருவனந்தபுரம் போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன் தலைமையிலான கேரள போலீசாரும் பாதுகாப்பு கொடுத்தனர். கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் 10 நாட்கள் திருவனந்தபுரம் கொலு மண்டபத்தில் வைத்து நவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நவராத்திரி வழிபாட்டிற்கு பின்னர் சாமி விக்கிரகங்கள் பவனியாக திருவனந்தபுரத்திலிருந்து நேற்று முன்தினம் (4-ம் தேதி) புறப்பட்டன. அன்று இரவு நெய்யாற்றின்கரை ஸ்ரீ கிருஷ்ணசாமி கோவிலில் தங்கல், நேற்று (5-ம் தேதி) குழித்துறை ஸ்ரீ மகாதேவர் கோயில் மற்றும் சாமுண்டேஸ்வரி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் தங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக குமரி- கேரளா எல்லை பகுதியான களியக்காவிளையில் சாமி விக்கிரகங்களு தமிழக இந்து அறநிலை துறை சார்பாக வரவேற்பு அளிக்ப்பட்டது. சாமி விக்ரங்கள் மற்றும் மன்னரின் உடைவாள் ஆகியவற்றை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கேரள அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
குழித்துறை தேவசம் போர்டு கண்காணிப்பாளர் செந்தில் குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இன்று காலை குழித்துறையில் இருந்து காலை 9 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டது. வழிநெடுக பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்த ஊர்வலம் இன்று மாலை பத்மநாபபுரம் அரண்மனை சென்றடைகிறது. அங்கிருந்து சாமி விக்ரகங்கள் பவனியாக எடுத்து வந்து அந்தந்த ஆலயங்களில் கொண்டு வைக்கப்படுகிறது. இதையொட்டி தமிழக மற்றும் கேரளா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.