கரூர்,
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில், நடிகை அம்பிகா கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது நடிகை அம்பிகா அங்குள்ள காட்சிகளை கலங்கிய கண்களோடு பார்த்தார். பின்னர் சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை அம்பிகா கூறியதாவது:-
“சம்பவம் குறித்து அறிந்த உடனே வர வேண்டுமென நினைத்தேன், பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வேண்டுமென மனதில்பட்டது.
நான் இங்கு வந்ததில் எந்த அரசியலும் இல்லை, யாரையும் ஆதரித்தோ, எதிர்த்தோ பேச நான் வரவில்லை.
குழந்தைகளை அழைத்து வந்தது பெற்றோர்களின் தவறு, கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் குழந்தைகளை அழைத்து செல்லக்கூடாது. இதுபோன்ற நிகழ்வுகளை டிவி முன்பு அமர்ந்து பார்க்கலாம்.
இதுபோன்ற துயரம் இனி எப்போதும் நடக்க கூடாது ஒரு சம்பவம் நடந்த பிறகு யாரையும் குறை சொல்வதில் அர்த்தமில்லை. கூட்டங்களின் போது உரிய அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.