திருவள்ளூர்:
நல்ல பழக்கங்கள், கடினமான தேர்வுகளை எதிர்கொள்ள உதவும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
பள்ளி மாணவர்களிடம் மன அழுத்தம் இல்லாத சூழலை உருவாக்க பிரதமர் மோடி தலைமையில் ‘தேர்வு வீரர்கள்’ என்ற இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த இயக்கம் சார்பில் ‘பரிக் ஷா பே சர்ச்சா’ என்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதன்படி, திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியில் உள்ள ஆர்எம்கே பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது ஆளுநர் பேசியதாவது: மாணவ, மாணவிகள் அதிகாலையில் எழுந்து, உடற்பயிற்சி, யோகா செய்ய வேண்டும். தினமும் கடினமான பாடங்களைப் படிக்க வேண்டும். நல்ல பழக்கங்கள், கடினமான தேர்வுகளை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.
வினாத்தாளை வாங்கியதும், தெரியாத கேள்விகளைப் பார்த்து பதற்றப்படக் கூடாது. நாம் நினைத்தது நடைபெறாவிட்டல், அதை தோல்வியாக கருதக் கூடாது. சிறு பின்னடைவாக கருத வேண்டும்.
மீண்டும் முயற்சி செய்து, நினைத்ததை முடிக்கவேண்டும். சாதனையாளர்களின் சுயசரிதையைப் படித்து, அதை ஊக்கமாக எடுத்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, தேர்வை தைரியமாக எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி எழுதிய ‘தேர்வு வீரர்கள்’ என்ற புத்தகத்தை, மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.