நாமக்கல்:
காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதால், 5 மாநிலங்களில் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லில் இயங்கி வருகிறது.
இந்த சங்கத்தில் உள்ள காஸ் டேங்கர் லாரிகள், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு சமையல் காஸ் கொண்டு செல்லும் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன.
மொத்தம் 5 ஆயிரம் டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வாடகை ஒப்பந்தத்தில் 700-க்கும் அதிகமான காஸ் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், நாமக்கல்லில் தென்மண்டல காஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்க அவசரப் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
700-க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்காததால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைவாய்ப்பு இழந்து, வாகன கடனைக் கட்ட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.