அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க ஒருசில பழக்கவழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுவது பலன் தரும்.
- நட்பு வட்டம் உங்கள் நலனில் அக்கறை கொள்வதாக அமைய வேண்டும். உங்களுடைய செயல்பாடுகளை நேர்மறையாக விமர்சித்து நல்வழிப்படுத்தும் நல் உள்ளங்களுடன் நட்புறவை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு செயல்பாடுகளையும் ஊக்குவித்து நிறை, குறைகளை தவறாமல் சுட்டிக்காட்டுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.
- மற்றவர்கள் உங்களிடம் கருத்து கேட்டாலோ, உதவி கேட்டாலோ உங்கள் மனதில் எழும் எண்ணங்களை தயங்காமல் வெளிப்படுத்திவிடுங்கள். உங்கள் மனம்
இல்லை' என்று சொல்ல நினைக்கும். அதன் விருப்பத்துக்கு மாறாக
ஆம்’ என்று சொல்லாதீர்கள். நீங்கள் விரும்பாத விஷயங்களை செய்தால் உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வதாக அமைந்துவிடும். அது தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் குலைத்துவிடும். - தினமும் உறுதிமொழி எடுங்கள். `இன்று என்னால் முடிந்ததை செய்துள்ளேன்’ என்பது போன்ற மந்திரமாக அது அமையட்டும். பிறருக்கு உங்களால் இயன்ற உதவிகளை தயங்காமல் செய்யுங்கள். அது உங்களுக்கு நேர்மறை உணர்வைத் தரும்.
- கடினமான காலங்களில் உங்களுக்கு பக்கபலமாக இருந்தவர்களுக்கு நன்றியுடன் இருங்கள். பிறர் செய்யும் சின்னச்சின்ன உதவிகளுக்கு கூட நன்றி சொல்ல மறக்காதீர்கள். நேர்மறையான எண்ணங்களை மனதில் விதையுங்கள். அது மன வலிமையை தரும்.
- இசை கூட ஒரு வகையான சிகிச்சை முறைதான். அதற்கு மனதை சாந்தப்படுத்தி மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும் சக்தி உண்டு. வேகமான, உற்சாகமான வரிகள் கொண்ட பாடல்கள் நேர்மறை உணர்ச்சிகளை வெளிக்கொணர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள். எதிர்காலத்தைப் பற்றி அதிகமாக சிந்தித்தும் கவலை கொள்ளாதீர்கள். தற்போது கிடைத்ததை சிறப்பாகப் பயன்படுத்துங்கள். வாழ்க்கையை மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் அனுபவிக்கும் திருப்தியை அது தரும்.
- எப்போதும் நண்பர்களிடம் ஆலோசனை கேட்பது ஏற்புடையதாக இருக்காது. உங்கள் உள்ளுணர்வின் அடிப்படையில் முடிவுகளை எடுங்கள். அது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சிறப்பாக செயல்பட வழிகாட்டும்.