பாட்னா,
பீகார் சட்டசபை தேர்தலையொட்டி, பாட்னா புறநகரான தானாபூரில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி ராம் கிருபால் யாதவை ஆதரித்து உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசார கூட்டத்தில் அவர் பேசுகையில், “பீகார் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க பர்தா அணிந்து வரும் பெண் வாக்காளர்களின் அடையாளத்தை சரிபார்க்க அங்கன்வாடி பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
ஆனால் அதை காங்கிரசும், ராஷ்டிரீய ஜனதாதளமும் சர்ச்சை ஆக்குகின்றன. போலி வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டுமா? அந்த கட்சிகள் அதைத்தான் விரும்புகின்றன.
அதுபோல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக, வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வற்புறுத்துகின்றன. வாக்குச்சீட்டு முறை இருந்தால்தான் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முடியும் என்று கருதுகின்றன.
உத்தரபிரதேசத்தில் உள்ள மாபியாக்கள், ராஷ்டிரீய ஜனதாதளத்தின் கூட்டாளிகள். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அவர்களுக்கு உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட கதிதான் ஏற்படும்” என்று அவர் பேசினார்.