சென்னை,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன். அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட வெற்றிபெற்ற இவர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாக இருந்து வந்தார்.
இந்நிலையில், மனோஜ் பாண்டியன் இன்று திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயம் சென்ற மனோஜ் பாண்டியன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “வேறொரு இயக்கத்தை நம்பி, அந்த இயக்கத்தின் சொல்படிதான் நடக்கின்ற துர்பாக்கியமான காலம்தான் தற்போது அதிமுகவில் இருக்கிறது.

உழைப்பை அங்கீகரித்து அங்கீகாரம் தராத, உழைப்பு வேண்டாம் என்று ஒவ்வொரு தொண்டரையும் விரட்டக்கூடிய எடப்பாடி பழனிசாமியுடைய நோக்கம் என்ன, அவருடைய சிந்தனை என்ன..?. பாஜகவின் கிளைக்கழகமாக அதிமுக உள்ளது. எந்த கொள்கைக்காக அதிமுக உருவானதோ அது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
கொள்கையைப் பின்பற்றக்கூடிய திராவிடக் கட்சியுடன் நான் இணைந்துள்ளேன். இன்று திராவிடக் கொள்கையை பாதுகாக்கின்ற தலைவராக, போராட்டக் கொள்கையை எங்கும் அடகு வைக்காத ஒரு தலைவராக, எவ்வளவு சோதனை வந்தாலும் முயற்சிகளைச் சிறப்பாக செய்யக்கூடிய தலைவராகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதால், தற்போது திமுகவில் இணைந்துள்ளேன்.
இன்று மாலை 4 மணிக்கு எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்” என்று மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.