சென்னை,
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணிகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும். முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
அதில் உள்ள பெயர் விவரங்களை சரிபார்த்து திருத்திக் கொள்ளவும், பெயர் நீக்கப்பட்டவர்கள் பெயரை சேர்க்கவும், புதிதாக சேருபவர்களும் விண்ணப்பிக்கவும் இந்த கால அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்காக சிறப்பு முகாம்களையும் இந்திய தேர்தல் கமிஷன் நடத்தும்.
இந்த நாட்களில் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களை டிசம்பர் மாதத்தில் சரிபார்த்து, அவற்றை இறுதி செய்து ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
ஆனால் கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல் இந்த ஆண்டு தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியாக (எஸ்.ஐ.ஆர்.) அதை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொள்ள உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் எஸ்.ஐ.ஆர். பணி மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தில் இந்த பணிகள் எப்போது தொடங்கும் என்று கேட்டபோது தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமே எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணி தொடங்கும் தேதி அடுத்தவாரம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. இந்தப் பணியின்போது வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் ஒவ்வொரு வீடாக வந்து விண்ணப்பப்படிவங்களை வழங்குவார்கள்.
முன்னதாக வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்பதை சரிபார்த்து விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். பெயர் இடம்பெறாமல் இருந்தால், இந்திய தேர்தல் கமிஷன் குறிப்பிடும் 11 ஆவணங்களை விண்ணப்பத்துடன் சேர்த்து கொடுக்க வேண்டும்.
இந்த கால அவகாசத்தை பயன்படுத்தாவிட்டால் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க முடியாமல் போய்விடும். இவ்வாறு அவர் கூறினார்.