கரூர் நெரிசல் சம்பவம்; முன் ஜாமீன் கோரி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த மனு, திரும்பப் பெறப்பட்டதை அடுத்து அதை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்!!

சென்னை:
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்த மனு, திரும்பப் பெறப்பட்டதை அடுத்து அதை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூரில், செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, புஸ்ஸி ஆனந்த், மாவட்டச் செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக கரூர் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

புஸ்ஸி ஆனந்த் தரப்பில் இரண்டாவது முறையாக முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், புஸ்ஸி ஆனந்தின் முன் ஜாமீன் மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கரூர் நகர காவல் ஆய்வாளரை எதிர்மனுதாரராக குறிப்பிட்டு தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக புஸ்ஸி ஆனந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்டு, முன் ஜாமீன் மனு வாபஸ் பெற்றதால் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கரூர் துயர சம்பவ வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, அந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *