புதுடெல்லி,
மத்திய, மாநில தகவல் ஆணையத்தில் தகவல் ஆணையர்கள் நியமனத்தில் ஏற்படும் காலதாமதத்தால் தகவல் அறியும் விண்ணப்பங்கள் ஏராளமாக தேங்கியுள்ளன.
கேட்கப்படும் தகவல்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்து, மனுதாரர் அஞ்சலி பரத்வாஜ் சார்பில் வக்கீல் பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. அதில், மத்திய தகவல் ஆணையத்தின் தகவல் ஆணையர்களின் நியமனம் குறித்த காலத்திலும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்து மத்திய, மாநில அரசுகளுக்குப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.
ஆனால் இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை என தெரிவித்து மீண்டும் அஞ்சலி பரத்வாஜ் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்ய பக்சி அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது.
முடிவில், நீதிபதிகள், தகவல் ஆணையர்கள் நியமனத்தின் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்களை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்பதில் சந்தேகிக்க வேண்டியதில்லை, தகவல் ஆணையர்கள் நியமிக்காத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் உடனடியாக நியமிக்கும் நடவடிக்கைகளை தொடங்கி, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.