கோவை:
கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் நின்று செல்லும் வகையில் எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
‘கோயம்புத்தூர் சிட்டிசன்ஸ் போரம்’ அமைப்பு சார்பில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொடிசியா வளாகத்தில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.
இந்நிகழ்வில், சக்தி குழுமத் தலைவர் மாணிக்கம், கொடிசியா தலைவர் கார்த்திகேயன், முன்னாள் தலைவர் சுந்தரம், ‘சீமா’ தலைவர் மிதுன் ராம்தாஸ், இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் லுந்த், முன்னாள் தலைவர் நந்தகுமார், கே.ஜி.குழுமத் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: கோவையில் உள்ள என்டிசி நூற்பாலைகள் பிரச்சினைக்கு தீர்வுகாண தொழிற்சங்க நிர்வாகிகள், ஜவுளித் துறை அமைச்சரை சந்திக்க உதவினேன்.
கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் நின்று செல்லும் வகையில் எர்ணாகுளம் – பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கோவைக்கு வரும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ராஞ்சி – கோவை இடையே புதிய ரயில் சேவையும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
நான் ஒரே நேரத்தில் 3 மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டேன். மகாராஷ்டிரா மாநில ஆளுநராகப் பணியாற்றிய நிலையில் தற்போது குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளேன். கோவை விமான நிலைய வளர்ச்சிக்கு நிச்சயம் உதவுவேன். எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், உங்களில் ஒருவனாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, அதிமுக எம்எல்ஏ-க்கள் அம்மன் அர்சுணன், ஜெயராம், தாமோதரன், கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ், பி.ஆர்.ஜி.அருண்குமார், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா, திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அத்துமீறி நுழைந்த இளைஞர்கள்: தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகம் முன்புள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து குடியரசு துணைத் தலைவர் மரியாதை செய்தார். அவர் வருவதற்கு முன்னதாக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
திடீரென தடையை மீறி இருசக்கர வாகனத்தில் நுழைந்த இரு இளைஞர்கள், கோஷமெழுப்பினர். மேலும், போலீஸாரின் பிடியில் சிக்காமல் தப்பிச் சென்றனர். இதைக் கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.