இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 2022-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் பயங்கரமான கார் விபத்தில் சிக்கி படுகாயத்துடன் தப்பினார். கால்முட்டியில் ஆபரேஷன் செய்து கொண்ட அவர் 17-வது ஐ.பி.எல். தொடர் மூலம் மறுபிரவேசம் செய்வதற்காக தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் இவர்களது உடல்தகுதி குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காயத்தில் இருந்து தேறியுள்ள ரிஷப் பண்ட் தற்போது நன்றாக பேட்டிங் செய்கிறார். விக்கெட் கீப்பிங்கும் செய்கிறார். விரைவில் அவர் முழு உடல்தகுதியை எட்டி விடுவார். ஜூன் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அவர் விளையாடினால் பெரிய பலமாக இருக்கும். அவர் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்து.
சிக்கலின்றி விக்கெட் கீப்பிங் பணியை அவர் தொடரும் பட்சத்தில், அவரால் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விளையாட முடியும். அதற்கு முன்னோட்டமாக ஐ.பி.எல். போட்டியில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்கலாம்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு குறித்து கேட்கிறீர்கள். இந்திய கிரிக்கெட் வாரியம் சங்கங்களின் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். இது ஒரு நிறுவனம் அல்ல. எனவே இதில் யாரும் முதலீடு செய்ய முடியாது.
இவ்வாறு ஜெய் ஷா கூறினார்.