விசாகப்பட்டினம்:
ஆந்திர அணிக்கெதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் குவித்தது. இதையடுத்து தமிழக அணி மொத்தம் 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழக அணியின் வித்யுத் மட்டும் அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார். ஆந்திர வீரர் பிருத்விராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆந்திர அணி விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர இறுதியில் அந்த அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் சேர்த்திருந்தது.
இந்நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஆந்திர அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷேக் ரஷீத் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தமிழக அணி தரப்பில் சந்தீப் வாரியர் 4, திரிலோக் நாக், சோனு யாதவ், சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து 5 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை தமிழக அணி விளையாடத் தொடங்கியது.
தமிழக வீரர்கள் விமல் குமார் 20, என்.ஜெகதீசன் 0, பாலசுப்பிரமணியம் சச்சின் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். சாய் கிஷோர் 0, பிரதோஷ் ரஞ்சன் பால் 26 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 29 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் குவித்துள்ளது தமிழக அணி.
தற்போது மொத்தம் 107 ரன்கள் முன்னிலையுடன் இன்று 3-வது நாள் ஆட்டத்தை தமிழக அணி விளையாட உள்ளது.